துங்கபத்ரா அணை வளாகத்தில் நிச்சயதார்த்தம் நடத்திய பொறியாளர்
பெங்களூரு : 'ஆப்பரேஷன் சிந்துார்' நேரத்தின் போது அமலில் இருந்த தடையுத்தரவை மீறி, துங்கபத்ரா அணை வளாகத்தில், செயல் நிர்வாக பொறியாளர், தன் மகனின் திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி உள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இந்த வேளையில், நாட்டின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி கர்நாடக அரசும், அணைகள், விமான நிலையங்கள், முக்கியமான ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியது.அணை பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், சுற்றுலா பயணியருக்கு தடை விதித்திருந்தன.அதே போன்று, கொப்பால், விஜயநகரா மாவட்டங்களின் எல்லையில், முனிராபாத்தில் உள்ள துங்கபத்ரா அணையிலும் சுற்றுலா பயணியருக்கு, தடை விதிக்கப்பட்டிருந்தது. பொது மக்களும் நுழைய கூடாது என, உத்தரவிட்டிருந்தது.ஆனால் அணையின் செயல் நிர்வாக பொறியாளர் கிரிஷ் மேத்தி, இந்த உத்தரவை மீறி, துங்கபத்ரா அணை வளாகத்தில் தன் மகன் நிச்சயதார்த்த விழாவை ஆடம்பரமாக நடத்தியுள்ளார். நுாற்றுக்கணக்கான விருந்தினர்கள் வந்திருந்தனர். பெரிய ஷாமியானா போட்டு, இருக்கைகள் வைத்திருந்தனர். அனைவருக்கும் தடபுடலாக விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அணையின் பின் பகுதிக்கு யாரும் செல்ல கூடாது என்பதால், செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நுாற்றுக்கணக்கானோர், செக்போஸ்டை கடந்து அணை வளாகத்துக்கு சென்றதை, உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர்.விதிமுறைகளை மீறி, அணை வளாகத்தில் மகனுக்கு நிச்சயதார்த்தம் நடத்திய பொறியாளர் கிரிஷ் மேத்தி மீது, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகின்றனர்.அணை அதிகாரி ஒருவர் கூறியதாவது:துங்கபத்ரா அணை வளாகத்தில், பொறியாளர் கிரிஷ் மேத்தி நிகழ்ச்சி நடத்தியது குறித்து, எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இது பற்றி அங்கு சென்று விசாரணை நடத்துவோம். ஒருவேளை நிகழ்ச்சி நடத்தியது உண்மை என்றால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.