குடும்ப அரசியல் கோலோச்சும் கர்நாடகா
இன்றைய கால கட்டத்தில், குடும்ப அரசியல் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. அரசியல் குடும்பங்களில் இருந்து வந்த பலரும், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களாக உள்ளனர். குடும்ப அரசியலில் கர்நாடகா நான்காம் இடத்தில் உள்ளது. குடும்ப அரசியலில் இருந்து வந்த மக்கள் பிரதிநிதிகள் அதிகம் உள்ள மாநிலங்களில், கர்நாடகாவும் ஒன்றாகும். இதற்கு முன் ம.ஜ.த.,வை குடும்ப கட்சி, தந்தை, மகன்கள் கட்சி என, பா.ஜ.,வும், காங்கிரசும் விமர்சித்தன. ஆனால் இந்த கட்சிகளிலும், குடும்ப அரசியல கொடி கட்டி பறக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோர், குடும்ப அரசியலை கண்டித்து பேசுகின்றனர். ஆனால் இவர்களாலும், தங்கள் கட்சியில் குடும்ப அரசியல் நடப்பதை தடுக்க முடியவில்லை. கர்நாடகாவின் மக்கள் பிரதிநிதிகளில், மூன்றில் ஒருவர் குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்கள். ஆண்கள் மட்டுமின்றி, மகளிர் மக்கள் பிரதிநிதிகளில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், அரசியல் பின்னணி உள்ளவர்கள். மாநிலத்தின் 28 லோக்சபா உறுப்பினர்களில், 14 பேர் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். ராஜ்யசபா எம்.பி.,க்களில், இரண்டு பேர் மட்டும் குடும்ப பின்னணி உள்ளவர்கள். சட்டசபையின் 224 எம்.எல்.ஏ.,க்களில், 64 பேர், 14 எம்.எல்.சி.,க்கள் குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்கள். சிக்கோடி காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா ஜார்கிஹோளி, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள். தாவணகெரே எம்.பி., பிரபா, சுரங்கம், நில ஆய்வியல் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனாவின் மனைவி. மல்லிகார்ஜுனாவின் தந்தை சாமனுார் சிவசங்கரப்பா, தாவணகெரே வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜ்யசபா எம்.பி., ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மருமகன்.கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திரா, ஷிவமொக்கா தொகுதி எம்.பி.,யாகவும், இளைய மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா எம்.எல்.ஏ.,வாகவும் இருக்கிறார். மகனுக்காக ஷிகாரிபுரா தொகுதியை எடியூரப்பா விட்டுக் கொடுத்திருந்தார். பீமண்ணா கன்ட்ரே, சுதந்திரபோராட்டக்காரராக, காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவரது மகன் ஈஸ்வர் கன்ட்ரே, தற்போது சித்தராமையா அமைச்சரவையில், வனத்துறை அமைச்சராக இருக்கிறார். இவரது மகன் சாகர் கன்ட்ரே, பீதர் தொகுதி எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். வம்சா வழியாக அரசியலுக்கு வருகின்றனர். ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா குடும்பம், குடும்ப அரசியலுக்கு பெயர் பெற்றது. இவரது மூத்த மகன் ரேவண்ணா, எம்.எல்.ஏ.,வாகவும், இளைய மகன் குமாரசாமி மத்திய அமைச்சராகவும் பதவி வகிக்கின்றனர். பெங்களூரு ரூரல் எம்.பி., மஞ்சுநாத், தேவகவுடாவின் மருமகன். பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, பசவனகுடி பா.ஜ., -- எம்.எல்.ஏ., ரவி சுப்ரமண்யாவின் சகோதரரின் மகன். அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் சகோதரர் ரமேஷ் ஜார்கிஹோளி, பாலசந்திர ஜார்கிஹோளி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள். மற்றொரு சகோதரர் லக்கன் ஜார்கிஹோளி, சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். தந்தை, மகன், பேரன், மகள், மருமகள், மருமகன் என, குடும்பத்தினரே தேர்தலில் களமிறங்கி பதவிக்கு வருகின்றனர். எங்களுடையது தொண்டர்களின் கட்சி என, மார்தட்டும் கட்சிக்கும், தேர்தலின் போது தொண்டர்கள் நினைவுக்கு வருவது இல்லை. மேலிடத்திடம் போராடி, நெருக்கடி கொடுத்து தங்களின் குடும்பத்தினருக்கு, சீட் பெறுகின்றனர். குடும்ப பின்னணி இல்லாத புதிய தலைவர்கள் வளர வாய்ப்பு தருவது இல்லை. குடும்ப அரசியல் விஷயத்தில், கர்நாடகா நான்காவது இடத்தில் உள்ளது. இது ஏ.டி.ஆர்., எனும், 'அசோசியேஷன் பார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்' மற்றும் என்.இ.டபிள்யூ., எனும், 'நேஷனல் எலக்ஷன் வாட்ச்' ஆய்வில் தெரியவந்துள்ளது. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களில் 29 சதவீதம் பேர், குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். சட்டசபை, மேல்சபை, லோக்சபா தேர்தல் மட்டுமின்றி, உள்ளாட்சி, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து தேர்தல்களிலும், குடும்ப அரசியல் ஆழமாக வேரூன்றி உள்ளது. இதை பிடுங்கி எறிவது கஷ்டம் என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். - நமது நிருபர் -