உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் நடப்பாண்டு விவசாயிகள் தற்கொலை... குறைந்தது!: 2 ஆண்டுடன் ஒப்பிட்டு வருவாய் அமைச்சர் தகவல்

கர்நாடகாவில் நடப்பாண்டு விவசாயிகள் தற்கொலை... குறைந்தது!: 2 ஆண்டுடன் ஒப்பிட்டு வருவாய் அமைச்சர் தகவல்

பெங்களூரு: ''கர்நாடகாவில் நடப்பாண்டில், விவசாயிகள் தற்கொலை குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்கொலை எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது,'' என, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா சட்டசபையில் தெரிவித்தார். நாட்டின் முதுகெலும்பு எனப்படும் விவசாயிகள், கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் தற்கொலை செய்வது தொடர் கதையாக உள்ளது. வருமானம் இல்லாதது, காலநிலை மாற்றம், விளைச்சல் பாதிப்பு, கடன் போன்ற பல காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கர்நாடகாவில் ஹாவேரி, பெலகாவி, கலபுரகி, தார்வாட், மைசூரு, சிக்கமகளூரு, மாண்டியா ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்கின்றனர். இரு அவைகள் இது குறித்து, சட்டசபையில் ஹனுார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத் கேள்வி எழுப்பினார். 'இதுவரை தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கைய அரசு காலம் தாழ்த்தாமல் வெளியிட வேண்டும்' என வினவினார். அதேபோல, மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் ஹேமலதா நாயக்கும் கேள்வி எழுப்பினார். விவசாயிகள் தற்கொலை குறித்து இரண்டு அவைகளிலும் கேள்வி எழுந்ததால், காங்கிரஸ் அரசு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, எழுத்து மூலமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் 2023ல், 1,250 விவசாயிகளும், 2024ல், 1,082 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணமாக நிதியுதவியும் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை, 84 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், 65 பேர் நிவாரண தொகை வழங்க தகுதியானவர்கள் என அரசு முடிவு செய்தது. இரண்டு ஆண்டுகளை விட, நடப்பாண்டில் தற்கொலை எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டில், 31 மாவட்டங்களில், 15 மாவட்டங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை. அதே சமயம், கலபுரகியில் 14; சிக்கமகளூரில் 12 மற்றும் பிற மாவட்டங்களில் ஒற்றை இலக்கங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். அரசு திட்டம் கடந்த, 2023 முதல் கடந்த ஜூலை மாதம் வரை, ஹாவேரியில் 260,பெலகாவியில் 218, கலபுரகியில் 206, தார்வாட்டில் 172, மைசூரில் 166 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுவே, மாநிலத்தில் அதிகம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் உள்ள மாவட்டங்களாகும். கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025 ஜூலை வரை, இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு 98.10 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது. இதில், 2023ல் 54.10 கோடி ரூபாயும், 2024ல் 40.75 கோடி ரூபாயும், நடப்பாண்டில் 3.25 கோடி ரூபாயும் அடங்கும். இந்த ஆண்டு பருவமழை சரியான நேரத்தில் பொழிந்தது, காலநிலை சரியாக இருந்ததும் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதே சமயம், மத்திய அரசின், 'பி.எம்., கிசான் சம்மான் நிதி' திட்டம் மூலம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கல், மாநில அரசின் 'முதல்வர் வித்யாநிதி திட்டம்' மூலம் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி அளிக்கப்படுதல் போன்ற திட்டங்களில் பயனடையும் விவசாயிகள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. விவசாயிகளிடம், அரசு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !