உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பிடதி டவுன்ஷிப்பிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு காலவரையற்ற போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

பிடதி டவுன்ஷிப்பிற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு காலவரையற்ற போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

ராம்நகர்: பிடதியில் 'டவுன்ஷிப்' அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை துவக்கி உள்ளனர். மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, 2007ல் முதல்வராக இருந்தபோது வீடுகள், கடைகள், பள்ளிகள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட அன்றாட வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், ராம்நகரின் பிடதியில் டவுன்ஷிப் அமைப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். பல காரணங்களால் இந்தத் திட்டம் முடங்கிப் போனது. தற்போது துணை முதல்வர் சிவகுமார், பிடதியில் டவுன்ஷிப் அமைக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். இதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவலாளி வேலை டவுன்ஷிப் அமைப்பதற்காக பிடதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 9,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிலத்தை கையகப்படுத்த தற்போது நில அளவீடு செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'பிடதியில் டவுன்ஷிப் அமைப்பதால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. இருக்கும் நிலத்தையும் பறித்துவிட்டு, டவுன்ஷிப்பில் எங்களை காவலாளியாக வேலை பார்க்க வைக்க போகிறீர்களா?' என, விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். உயிர் கொடுக்க தயார் சில தினங்களுக்கு முன்பு, விவசாயிகளுடன் துணை முதல்வர் சிவகுமார் பேச்சு நடத்தினார். 'எக்காரணம் கொண்டும் டவுன்ஷிப் அமைக்கும் திட்டத்தை கைவிட மாட்டோம்; நீங்கள் நிலம் கொடுக்க தான் வேண்டும்' என மிரட்டும் தொனியில் விவசாயிகளிடம் சிவகுமார் பேசினார். இந்நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'நம் நிலம், நம் உரிமை' என்ற பெயரில் பைரமங்களா, கஞ்சுரனஹள்ளி கிராம விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு முதல், காலவரையற்ற போராட்டத்தை துவக்கினர். இரவு, பகலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் கூறுகையில், 'டவுன்ஷிப் அமைக்க 70 சதவீதம் விவசாயிகள் ஒப்புக் கொண்டதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறுவது பொய். டவுன்ஷிப் அமைக்க நிலம் கொடுப்பதால், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. உயிரை கொடுக்க தயாராக உள்ளோம். எக்காரணம் கொண்டும் நிலத்தை தர மாட்டோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ