உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தேவனஹள்ளியில் நிலம் எடுக்க எதிர்ப்பு சித்தராமையாவுடன் விவசாயிகள் சந்திப்பு

தேவனஹள்ளியில் நிலம் எடுக்க எதிர்ப்பு சித்தராமையாவுடன் விவசாயிகள் சந்திப்பு

பெங்களூரு:பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையாவை, தேவனஹள்ளி தாலுகா விவசாயிகள் நேற்று சந்தித்து, பாதுகாப்பு மற்றும் விண்வெளி திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்த வேண்டாமென கோரிக்கை விடுத்தனர்.பாதுகாப்பு மற்றும் விண்வெளி பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக, பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி அருகே சென்னராயப்பட்டணா மற்றும் அதை சுற்றியுள்ள 13 கிராமங்களில் 1,777 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, 2021ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது.நிலத்தை கையகப்படுத்த 2022ல் முறைப்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நிலத்தை கையகப்படுத்த 13 கிராம விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆயிரம் நாட்களுக்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை.கடந்த 10 நாட்களாக பெங்களூரு சுதந்திர பூங்காவிலும் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். முதல்வர் சித்தராமையாவை காவிரி இல்லத்தில் சந்தித்தும் பேசினர்.இந்நிலையில், விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையாவை, நடிகர் பிரகாஷ்ராஜ், சமூக ஆர்வலர் மேதா பட் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர். பாதுகாப்பு மற்றும் விண்வெளி திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்த வேண்டாமென கோரிக்கை வைத்தனர்.அப்போது சித்தராமையா பேசியது:நிலத்தை கையகப்படுத்தும் நடைமுறையை கைவிட்டால் நிறைய சட்டசிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அதுபற்றி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க வேண்டும். இந்த சூழலில் தெளிவான முடிவு எடுக்க 10 நாட்கள் அவகாசம் எங்களுக்கு தேவைப்படுகிறது. இதனால் அரசின் நிலைபாட்டை இன்று அறிவிக்க முடியாது.வரும் 15ம் தேதி மீண்டும் ஒரு முறை ஆலோசிப்போம். அன்று அரசின் நிலைபாட்டை தெளிவுபடுத்துகிறேன். ஜனநாயகத்தின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்கள் போராட்டத்தை தடுக்க நான் முயற்சிக்கவில்லை. நானும் விவசாய சங்கத்தில் இருந்து வந்தவன்.இவ்வாறு அவர் பேசினார்.தங்கள் நிலத்தில் விளைவித்த பழம், காய்கறிகளை கொடுத்து முதல்வரின் கவனத்தை விவசாயிகள் ஈர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை