உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நிவாரணம் வழங்காத அதிகாரிகள் விவசாயி வினோத போராட்டம்

 நிவாரணம் வழங்காத அதிகாரிகள் விவசாயி வினோத போராட்டம்

சிக்கமகளூரு: சந்தன மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் அலட்சியம் காட்டிய அதிகாரிகளின் செயலை கண்டித்து, ஒரு விவசாயி, வினோத போராட்டம் நடத்துகிறார். சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவில் வசிப்பவர் விவசாயி விசுகுமார். சாலை ஓரத்தில் இவரு க்கு சொந்தமான தோட்டம் இருந்தது. இதில் சந்தன மரங்கள், மாமரங்கள், வேப்பம், எலுமிச்சை, தென்னை உட்பட பலவித மான மரங்கள் உள்ளன. இந்த தோட்டத்தை தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கையகப்படுத்தினர். நிலத்தில் அபூர்வமான மரங்கள் இருந்ததால், நியாயமான நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தனர். எனவே தன் தோட்டத்தை, விசு குமார் விட்டுக்கொடுத்தார். ஆனால் மரங்களுக்கு அதிகாரிகள், நியாயமான விலை நிர்ணயிக்கவில்லை. சந்தன மரங்களுக்கு வெறும் 420 ரூபாய் நிர்ணயம் செய்து வழங்கினர். லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் தரும் சந்தன மரங்களுக்கு, வெறும் 420 ரூபாய் அளித்திருப்பதால், விசுகுமார் கோபம் அடைந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும், சந்தன மரத்துக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபாய் வழங்கும்படி உத்தரவிட்டது. ஆனால் அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. இதனால் மனம் நொந்த அவர், கடந்த வாரம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டார். அப்போதும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இதனால் மனம் நொந்த விசுகுமார், தனக்கு தானே இறுதி அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார். 'என் நிலம் மற்றும் விலை மதிப்புள்ள மரங்களுக்கு, நியாயமான நிவாரணம் வழங்காத நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், வனத்துறையின் ஊழல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், கட்டாயமாக நாளை (இன்று) எனது இரங்கல் அஞ்சலி கூட்டத்துக்கு வர வேண்டும்' என அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை