உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மகள் ஆணவக்கொலை தந்தை அதிரடி கைது

மகள் ஆணவக்கொலை தந்தை அதிரடி கைது

கலபுரகி: வேறு ஜாதி இளைஞரை காதலித்த மகளை கொன்று, எரித்த தந்தை கைது செய்யப்பட்டார்; மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கலபுரகி மாவட்டம், மேலகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் கொல்லுாரு. லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகள் கவிதா, 18. அதே கிராமத்தின் குருபா சமூகத்தை சேர்ந்தவர் மாலப்பா பூஜாரி. இருவரும் கலபுரகி நகரில் உள்ள பி.யு., கல்லுாரியில் படித்து வந்தனர். இருவரும் காதலிக்க துவங்கினர். இவ்விஷயம், நான்கைந்து மாதங்களுக்கு முன்பு கவிதாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இக்காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மகளை கல்லுாரிக்கு அனுப்புவதை நிறுத்தினர். காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கவிதா கேட்கவில்லை. 'என்னை தடுத்தால், வீட்டை விட்டுச் சென்று, மாலப்பா பூஜாரியை திருமணம் செய்வேன்' என கவிதா மிரட்டினார். இதனால் சங்கர் கொல்லுாரு கோபமடைந்தார். மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு சங்கர் கொல்லுாரு, தன் சகோதரர் சரணு, உறவினர் தாட்டு ஆகியோருடன் சேர்ந்து கவிதா வாயில் வலுக்கட்டாயமாக பூச்சிகொல்லி மருந்தை ஊற்றிக் கொன்றனர். பின், மறுநாள் காலையில், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, கிராமத்தினரை நம்ப வைத்தனர். பின், கிராமத்திற்கு வெளியே உள்ள தங்கள் பண்ணையில், மகளின் உடலை எரித்தனர். தாமதமாக தகவல் அறிந்த பர்ஹாதாபாத் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். முதலில் மறுத்த கவிதாவின் தந்தை, பின் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த சகோதரர் சரணு, உறவினர் தாட்டுவை போலீசார் தேடி வருகின்றனர். தங்கள் கிராமத்தில் ஆணவக்கொலை நடந்திருப்பதை நம்ப முடியாமல் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ