சொந்த வீட்டுக்கு வரும் உணர்வு: நடிகர் பிரபுதேவா பெருமிதம்
மைசூரு: ‘‘ஐந்தாறு ஆண்டுகளுக்கு பின், என் தாயுடன் மைசூருக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மைசூரு வருவது சொந்த வீட்டுக்கு வரும் உணர்வு தருகிறது,’’ என நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா தெரிவித்தார். மைசூரு யுவ தசரா, இன்று முதல் 17ம் தேதி வரை, உத்தனஹள்ளி மைதானத்தில் நடக்கிறது. யுவ தசராவை, நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா துவக்கி வைக்கிறார். இதற்காக நேற்று மைசூருக்கு தன் தாயுடன் வந்தார். சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள சுத்துார் மடத்திற்கு சென்ற அவர்கள், மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றனர். பின், பிரபு தேவா அளித்த பேட்டி: கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்கு பின், தசராவுக்கு என் தாயுடன் மைசூருக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தசரா பண்டிகை எப்போதுமே எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. இங்கு வருவது என் சொந்த வீட்டுக்கு வருவது போன்ற உணர்வை அளிக்கிறது. சிறுவயதில் கோடை விடுமுறையின் போது, மைசூரு நகருக்கு வந்த நினைவுகள், இன்னும் பசுமையாக இருக்கின்றன. மைசூரின் பாரம்பரியம், அதன் அழகும் மாறாதவை. யுவ தசராவை துவக்கி வைக்க எனக்கு முறைப்படி அழைப்பு விடுத்து, கவுரவித்த கர்நாடக அரசுக்கும், முதல்வர் சிவகுமார் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.