உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குழந்தையின் வயிற்றில் கரு ஆப்பரேஷன் மூலம் அகற்றம்

குழந்தையின் வயிற்றில் கரு ஆப்பரேஷன் மூலம் அகற்றம்

ஹூப்பள்ளி: குழந்தையின் வயிற்றில் இருந்த, மற்றொரு கருவை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். தற்போது குணமடைந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து நேற்று வீட்டுக்கு அனுப்பப்பட்டது. தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவில் வசிக்கும் ஒரு பெண். தன் இரண்டாவது பிரசவத்துக்காக, செப்டம்பர் 23ம் தேதி, ஹூப்பள்ளியின் கிம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார். பிரசவத்துக்கு முன், கர்ப்பிணிக்கு 'அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை' செய்த போது, குழந்தையின் வயிற்றில் கரு போன்று, ஏதோ இருப்பது தெரிந்தது. இது பிரசவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்து கொண்டு, பெண்ணுக்கு சுகப்பிரசவம் செய்ய வைத்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின் குழந்தையை பரிசோதனை செய்து பார்த்த போது, அதன் வயிற்றுக்குள் மற்றொரு கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே இது மிகவும் அபூர்வமாகும். குழந்தையின் வருங்காலத்தை மனதில் கொண்டு, அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி சில நாட்களுக்கு முன், மூத்த அறுவை சிகிச்சை வல்லுநர் ராஜசங்கர் தலைமையில், சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடந்தது. முதலில் வயிற்றின் எந்த பாகத்தில், கரு உள்ளது என்பதை கண்டுபிடித்தனர். குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, வயிற்றில் சிறிதாக ஓட்டை போட்டு, கருவை வெளியே எடுத்தனர். இதற்கு மூளை, இதயம் இல்லை; முதுகெலும்பு, சிறிய கை, கால் இருந்தது. இதை பாதுகாத்து வைத்துள்ள கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம், வரும் நாட்களில் மருத்துவ மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின், குழந்தை முழுமையாக குணம் அடைந்ததால், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை