தனியார் மருத்துவமனைகளுக்கு அபராதம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
பெங்களூரு: கர்நாடக தனியார் மருத்துவமனைகள் கட்டுப்பாட்டு சட்ட விதிமுறைகளை மீறிய, ஒன்பது தனியார் மருத்துவமனைகளுக்கு, பெங்களூரு நகர் மாவட்ட நிர்வாகம், அபராதம் விதித்துள்ளது. பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தனியார் மருத்துவமனைகள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தொடர்பாக, நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் காந்தராஜு பேசியதாவது: விதிமுறைகளை மீறிய மருத்துவமனைகள் கிளினிக்குகள், தங்களின் குளறுபடிகளை சரி செய்து கொள்ள வேண்டும். வரும் நாட்களில் விதிமுறைகளை மீறுவது இல்லை என, உறுதி மொழி எழுதி தர வேண்டும். நோயாளிகள் சிகிச்சைக்காக, மருத்துவமனைகளுக்கு வரும் போது, அவர்களுக்கு தேவையான தகவல்களை தெரிவிப்பது கட்டாயம். நோயாளிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் பிரச்னைகளை தெரிந்து கொண்டு, சிகிச்சை அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறினால், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்கப்படும். கர்நாடக தனியார் மருத்துவமனைகள் கட்டுப்பாட்டு சட்ட விதிமுறைகளை மீறி, அதிகமான கட்டணம் வசூலித்தது, அடிப்படை வசதிகள் இல்லாதது உட்பட, பல குளறுபடிகள் செய்த ஒன்பது தனியார் மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வசந்த நகரின், குயின்ஸ் சாலையில் உள்ள ஷிபா மருத்துவனைக்கு 10 ஆயிரம் ரூபாய், காட்டன்பேட் மல்லிகா மருத்துவமனைக்கு 25 ஆயிரம் ரூபாய், தேவி நகரின் ஷாமா சாரிடபில் கிளினிக்குக்கு 10 ஆயிரம் ரூபாய், சி.வி.ராமன் நகரின் கம்பர்ட் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய். எலஹங்காவின் செவன் ஹில்ஸ் பாலி கிளினிக்குக்கு 10 ஆயிரம் ரூபாய், பின்னி பேட்டின் வெஸ்ட் சைடு மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய், ராஜாஜி நகரின் லாசிங்டன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மருத்துவமனைக்கு, 50 ஆயிரம் ரூபாய், காடுகொண்டனஹள்ளியின், வினோப் நகரின் ரஜீயா கிளினிக்கு 10 ஆயிரம் ரூபாய், உத்தரஹள்ளியின் விநாயகா கிளினிக்குக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எலஹங்காவில் உள்ள மணிப்பால் மருத்துவமனை, நோயாளியிடம் வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.