பிறந்து ஐந்து நாளே ஆன பெண் சிசு ரூ.10,000க்கு விற்பனை
பல்லாரி: பிறந்து ஐந்து நாட்களே ஆன, பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ததாக, ' ஆஷா' ஊழியர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாரி மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின், கமலாபுரா கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணி ஒருவர், ஆகஸ்ட் 26ம் தேதி, பிரசவத்துக்காக ஹொஸ்பேட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஐந்தே நாட்களில், பணத்தாசையால், ஹகரி பொம்மனஹள்ளியில் வசிக்கும் கரிபசப்பா என்பவருக்கு 10,000 ரூபாய்க்கு விற்றார். இதுகுறித்து, குழந்தைகள் நலத்துறைக்கு சகாயவாணி வழியாக புகார் வந்தது. அதிகாரிகள், ஹகரி பொம்மனஹள்ளிக்கு வந்து, விசாரணை நடத்தினர். குழந்தையை விலைக்கு வாங்கியதை கரிபசப்பா ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்படி, கமலாபுரா கிராமத்துக்கு சென்று, குழந்தையின் தாயை கண்டுபிடித்து விசாரித்தனர். அவரும் தவறை ஒப்புக்கொண்டார். 'ஆஷா' ஊழியர்கள் கவிதா, நாகரத்னா, குழந்தையின் தாய்க்கு பணத்தாசை காட்டி, குழந்தையை விற்க வைத்துள்ளனர். நேற்று காலை குழந்தையை மீட்ட அதிகாரிகள், அரசு சார்ந்த சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைத்தனர். 'ஆஷா' ஊழியர்கள் உட்பட, நால்வர் மீது, ஹொஸ்பேட் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.