உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உதவிய நாட்டுப்புற கலைஞர்கள்

உதவிய நாட்டுப்புற கலைஞர்கள்

– நமது நிருபர் –: தட்சிண கன்னடா மாவட்டம், உல்லால் பகுதியின் இளைஞர்களை உள்ளடக்கிய நாட்டுப்புற கலைஞர்களான, ‘டீம் ஹனுமான்’ குழுவினர், கடந்த சில ஆண்டுகளாக நவராத்திரி பண்டிகையின் போது, பல மாவட்டங்களுக்கு சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும், இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது உடுப்பி, மங்களூரு போன்ற இடங்களில் பல நாட்கள் இரவு, பகலாக நாடகம் போட்டனர். இவர்களின் நாடகம் புராண கதைகளை மையப்படுத்தியே இருக்கும். புராணங்களில் கூறப்பட்ட விஷயங்களை புரியும்படி எளிமையாக வழங்கினர். இதன் மூலம், 2 லட்சம் ரூபாய் பணம் சம்பாதித்தனர். இந்த தொகையை, தட்சிண கன்னடாவின் பன்ட்வால் பகுதியை சேர்ந்த ஆனந்த் – யசோதா தம்பதியின், 4 வயது மகளான மஞ்சுவின் காது அறுவை சிகிச்சைக்கு தானமாக வழங்கினர். இது, டீம் ஹனுமான் குழுவினருக்கு புகழை தேடி தந்து உள்ளது. இது குறித்து, அக்குழுவின் தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது: எங்கள் குழுவில் உள்ள அனைவரும் இளைஞர்கள். நாங்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றுகிறோம். கலையின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே, பண்டிகை நாட்களில் நாடகம் நிகழ்த்துவோம். நாடகம் போடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உதவிகள் செய்வோம். அவ்வகையில், 4 வயது சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு பணம் வேண்டும் என்ற செய்தியை அறிந்தோம். அதனால், அக்குழந்தையின் பெற்றோரிடம், இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தோம். இதுபோன்ற செயல்களை செய்யும் போது, மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது. நாங்கள் செய்யும் உதவியை வெளியில் சொல்வதில்லை. கலை, கலாசராம் என்பது மிகவும் முக்கியம். இதை மறந்தால் மனித வாழ்வு அர்த்தமற்றதாகி விடும். நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, நாடகங்களை இளம்தலைமுறையினர் அவசியம் பார்க்க வேண்டும். அப்போது, தான் நம் முன்னோர்களின் வாழ்வியலை புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை