உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  போக்குவரத்து விதிகளை மீறும் உணவு டெலிவரி இளைஞர்கள்

 போக்குவரத்து விதிகளை மீறும் உணவு டெலிவரி இளைஞர்கள்

பெங்களூரு: பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரில், உணவு வினியோகிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவர்கள் மீது மூன்று ஆண்டுகளில், 1.46 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: பெங்களூரில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக உணவு வினியோகிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். ஐ.டி., - பி.டி., வர்த்தக நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில், உணவு கொண்டு செல்லும் இளைஞர்கள், ஒழுங்கின்றி நடந்து கொள்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. நிர்ணயித்த நேரத்துக்குள் உணவு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அவசரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிச் செல்கின்றனர். இதுகுறித்து, 2023ம் ஆண்டு 30,968 வழக்குகள், 2024ல் 52,153 வழக்குகள், 2025ல் 63,718 வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூரு கிழக்கு மண்டல எல்லையிலேயே, 73,971 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த மண்டலத்தின் ஒயிட்பீல்டில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இப்பகுதிகளில் ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், அபார்ட்மென்டுகள் அதிகம் உள்ளன. இங்கு உணவு ஆர்டர் செய்வோர் எண்ணிக்கை, மிகவும் அதிகம். ஹலசூரு, பானஸ்வாடியிலும் போக்குவரத்து விதிமீறல் அதிகரிக்கிறது. உணவு மற்றும் அன்றாட தேவைக்கான பொருட்களை 10 நிமிடத்துக்குள் கொண்டு சேர்க்க, டெலிவரி இளைஞர்கள் உயிரை பணயம் வைத்து அதிவேகமாக பைக்கில் செல்கின்றனர். இது மிகவும் தவறு. நிர்ணயித்த நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கு, மருந்தோ அல்லது ஆம்புலன்ஸ்கள் போன்று அத்தியாவசிய தேவை அல்ல. உணவு கொண்டு செல்ல, ஐந்து நிமிடம் தாமதமானாலும் எதுவும் நடந்து விடாது. இதை உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, சாலை பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை