அன்னபாக்யா திட்டத்தில் உணவு கிட்கள்
பெங்களூரு: மாநிலத்தில் 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ், கூடுதலாக வழங்கப்பட்ட ஐந்து கிலோ அரிசிக்கு பதிலாக, இந்திரா உணவு 'கிட்' வழங்க, அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. முதல்வர் சித்தராமையா தலைமையில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் முடிந்த பின், சட்டத்துறை அமைச்சர் கே.ஹெச்.பாட்டீல் அளித்த பேட்டி: 'அன்னபாக்யா' திட்டத்தில், கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்குவதற்கு பதிலாக, ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய 'கிட்' வழங்க, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவானது. பயனாளிகளுக்கு அரிசி வழங்க, பட்ஜெட்டில் 6,426 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 6,119.52 கோடி ரூபாய் செலவிட்டு, உணவு பொருட்கள் 'கிட்' வழங்கப்படும். இந்த 'கிட்'டில் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உப்பு இருக்கும். ஒருவர், இருவர் இருந்தால் அரை கிலோ பொருட்கள் வழங்கப்படும். குடும்பத்தில் மூன்று, நான்கு பேர் இருந்தால், ஒரு கிலோ வழங்கப்படும். ஐந்துக்கும் மேற்பட்டோர் இருந்தால், ஒன்றரை கிலோ பொருட்கள் வழங்கப்படும். அன்னபாக்யா அரிசி கடத்துவது, திருட்டு நடப்பதால் மாநில அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்தது. மாநிலத்தில் ஒரு கோடியே 26 லட்சத்து 15,815 ரேஷன்கார்டுகள் உள்ளன. இதன் மூலம் நான்கு கோடியே 48 லட்சத்து 62,192 பயனாளிகள் பயன் அடைகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.