ஐஸ்கிரீமில் டிடெர்ஜென்ட் பவுடர் உணவு பாதுகாப்பு துறை கண்டுபிடிப்பு
பெங்களூரு: சிறார்கள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் டிடெர்ஜென்ட்; குளிர்பானத்தில் எலும்புகளை பலவீனமாக்கும் ரசாயனம் ஆகியவை கலந்திருப்பதை, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு துறை கண்டுப்பிடித்தது.இதுகுறித்து, உணவு பாதுகாப்பு, தரக்கட்டுப்பாடு துறை அதிகாரிகள் கூறியதாவது:கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் உட்பட, பல்வேறு உணவுகளில் அபாயகரமான அம்சங்கள் சேர்க்கப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. இதை தீவிரமாக கருதிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்துகின்றனர்.தரமற்ற பொருட்களை விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.கர்நாடகாவின் 220 கடைகளில், சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனையில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது. சில உணவு பொருட்களின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.ஐஸ்கிரீம்களில் நுரையை கொண்டு வர, டிடெர்ஜென்ட் பவுடரை பயன்படுத்துகின்றனர். குளிர்பானங்களில் எலும்புகளை பலவீனமாக்கும் பாஸ்பரிக் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இத்தகைய அபாயமான பொருட்களை விற்கும் கடைகளுக்கு, 38,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் பொருட்களில், கலப்படம் செய்வதை, உணவு கட்டுப்பாட்டு துறை தீவிரமாக கருதுகிறது. ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டது. சில தொழிற்சாலைகளில், துாய்மை, சுகாதாரம் கிடையாது.தயாரிப்பு செலவை குறைக்கும் நோக்கில், டிடெர்ஜென்ட் பவுடர், யூரியா பயன்படுத்துகின்றனர். இயற்கையான சர்க்கரையை பயன்படுத்தாமல், சுவை மற்றும் நிறத்தை அதிகரிக்க, தடை செய்யப்பட்ட பொருட்கள், செயற்கை நிறங்களை சேர்ப்பது கண்டறியபட்டது. ஐஸ் கேண்டிகள், குளிர்பானங்களில் அசுத்தமான, குடிக்க தகுதியற்ற நீரை பயன்படுத்துகின்றனர்.உற்பத்திகளில் வாசனை பொருட்களை நிர்ணயித்த அளவை விட, அதிகமான அளவில் சேர்ப்பதும் தெரிய வந்தது.உணவுப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நிறங்கள், பிளேவர்களை அரசிடம் அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் வாங்கப்படவில்லை. தரமற்ற பொருட்களை தயாரிக்கும், விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.