காங்கிரசின் பூஜ்ய வளர்ச்சி மாநாடு; பா.ஜ., மாஜி எம்.எல்.ஏ., கிண்டல்
பல்லாரி : ''காங்கிரஸ் நடத்துவது சாதனை மாநாடு அல்ல. பூஜ்ய வளர்ச்சி மாநாடு. பா.ஜ.,வினர் மீது 40 சதவீதம் குற்றச்சாட்டு சுமத்திய காங்கிரசார், 60 சதவீதம் லஞ்சம் வாங்குகின்றனர்,'' என பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சோமசேகர ரெட்டி குற்றஞ்சாட்டினார்.பல்லாரியில் நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ.,வினர் 40 சதவீதம் லஞ்சம் வாங்குவதாக காங்கிரசார் குற்றம் சுமத்தினர். அவர்கள், 60 சதவீதம் லஞ்சம் வாங்குவதாக, ஒப்பந்ததாரர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். எஸ்.சி., - எஸ்.டி., நிதி முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் நிவாரணமும், வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. துங்கபத்ரா அணைக்கு புதிய கேட் பொருத்த, அரசால் முடியவில்லை. காங்கிரஸ் நடத்தியது சாதனை மாநாடு அல்ல. பூஜ்ய வளர்ச்சி மாநாடு. பல்லாரி மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜகீர் அகமது கான், மாவட்டத்துக்கு வருவதை மறந்துவிட்டார். அவரை கண்டுபிடித்து தரும்படி போலீசில் புகார் அளித்து உள்ளோம்.பல்லாரி நகர சட்டசபை தொகுதியில் ஊழல் இல்லாத நிர்வாகத்தை செயல்படுத்துவேன் என்று எம்.எல்.ஏ., நாரா பரத் ரெட்டி உறுதி அளித்திருந்தார். ஆனால், தொகுதியில் லஞ்சம் கரைபுரண்டு ஓடுகிறது.இன்னும் மணல் கொள்ளை நடக்கிறது. போலீஸ், ஆர்.டி.ஓ., ஆபீசில் பணம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.