உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாஜி கவுன்சிலர் கொலை மேலும் இருவர் கைது

மாஜி கவுன்சிலர் கொலை மேலும் இருவர் கைது

உத்தர கன்னடா: கார்வார் பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.கார்வார் மாநகராட்சி பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் சதீஷ் கோலங்கர். இவர், 20ம் தேதி காலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த சிலர், கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக, கோவாவில் இருந்த நிதேசை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி., நாராயண் அளித்த பேட்டி:கார்வார் மாநகராட்சி கடையில் வியாபாரம் செய்ய, முன்னாள் கவுன்சிலர் சதீஷ் கோலங்கரிடம் 4 லட்சம் ரூபாயை, நிதேஷ் என்பவர் கொடுத்திருந்தார். மூன்று மாதங்களில், அவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தான் கொடுத்த பணத்தை சதீஷிடம் நிதேஷ் கேட்டுள்ளார்.சதீஷும், 4 லட்சம் ரூபாயில், 3.40 லட்சம் மட்டுமே கொடுத்தார். 60,000 ரூபாய் கொடுக்கவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே இரண்டு மூன்று முறை கைகலப்பு நடந்துள்ளது. ஆனால், இரு தரப்பிலும் புகார் செய்யவில்லை.ஒரு முறை நடந்த சண்டையின் போது, கூலிப்படையை வைத்து நிதேஷை கொன்று விடுவதாக சதீஷ் மிரட்டி உள்ளார். இதை நிரூபிப்பது போல, கோவாவில் உள்ள நண்பர் ஒருவர், நிதேஷுக்கு போன் செய்து, 'உன்னை கொல்ல கூலிப்படையினருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜாக்கிரதையாக இரு' என்று கூறியுள்ளார்.அதிர்ச்சி அடைந்த அவர், இம்மாதம் 17ம் தேதி தன் நண்பர்கள் நித்யானந்தா ஹரிகாந்தா, சுரேந்தர் நாயக், தர்ஷன் ஆகியோருடன் சேர்ந்து சதீஷை கொல்ல திட்டம் தீட்டினார். இதற்கு தர்ஷன் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், நிதேஷ் கும்பல், சதீஷ் நடமாட்டத்தை கண்காணித்தனர். இம்மாதம் 20ம் தேதி அவர் மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க சென்றிருந்தார். அங்கு நிதேஷ், சதீஷை வம்புக்கு இழுத்தார். தன் காரில் இருந்த கத்தியை எடுத்து, சதீஷை மூன்று முறை குத்தி விட்டு, மூவரும் தப்பியோடி விட்டனர்.சம்பவம் தொடர்பாக கோவாவில் பார் ஒன்றில் பார்ட்டியில் இருந்த நிதேஷை, கார்வார் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நித்யானந்தா ஹரிகாந்தா, சுரேந்திர நாயக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில் தர்ஷனுக்கு எந்த தொடர்பும் இல்லாததால், அவர் விடுவிக்கப்பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி