மாணவி முகத்தில் கத்தியால் கீறிய மாஜி வீட்டு உரிமையாளர் கைது
பனசங்கரி : காதலிக்க மறுத்ததால் கல்லுாரி மாணவி முகத்தில் கத்தியால் தாக்கிய முன்னாள் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.பெங்களூரு, பசவேஸ்வராநகர் அருகே கமலா நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 45. இவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு தம்பதி வாடகைக்கு வசித்தனர்.அந்த தம்பதிக்கு 21 வயதில் மகள் உள்ளார்; கல்லுாரியில் படிக்கிறார். மாணவியை, ஸ்ரீகாந்த் ஒருதலையாக காதலித்துள்ளார். மாணவியிடம் காதலை வெளிப்படுத்தியபோது, அவர் நிராகரித்துள்ளார்.ஆனாலும் கல்லுாரிக்கு செல்லும் வழியில், மாணவியை பின் தொடர்ந்து சென்று ஸ்ரீகாந்த் காதல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி ஸ்ரீகாந்த் மனைவியிடம், மாணவி கூறினார்; போலீசிலும் புகார் செய்தார்.இதையடுத்து மாணவியும், அவரது பெற்றோரும் வீட்டை காலி செய்துவிட்டு குருபரஹள்ளி சென்றனர். கடந்த மூன்று மாதங்களாக தினமும் மாணவியை பின்தொடர்ந்து, ஸ்ரீகாந்த் சென்று உள்ளார்.கடந்த 8ம் தேதி தேவகவுடா பெட்ரோல் பங்க் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவியும், அவரது ஆண் நண்பரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அங்கு வந்த ஸ்ரீகாந்த், மாணவியிடம், ''இவனை காதலிப்பதால் தான், என் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாயா?'' என்று கேட்டு தகராறு செய்தார்.மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி, அவரது ஆண் நண்பரின் முகத்தில் கீறிவிட்டு அங்கிருந்து தப்பினார்.மாணவி அளித்த புகாரில் பனசங்கரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்த் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.