வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு முடா முன்னாள் கமிஷனரின் விசாரணை அறிக்கை தாக்கல்
பெங்களூரு: 'முடா' வழக்கில் முன்னாள் கமிஷனர் தினேஷ் குமாரிடம் நடத்திய விசாரணை அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்தது. 'முடா' எனும், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் பயனாளிகளுக்கு, 50:50க்கு சதவீதத்தில், வீட்டுமனை ஒதுக்கியதில் நடந்த முறைகேடு பற்றி, லோக் ஆயுக்தா விசாரிக்கிறது. முடா அதிகாரிகளை மிரட்டியும், முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், 14 வீட்டுமனைகள் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்த லோக் ஆயுக்தா, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதனை எதிர்த்து மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனு மீதும் விசாரணை நடக்கிறது. முடாவில் நடந்த முறைகேடு குறித்த முழு விசாரணை அறிக்கையை சமர்பித்த பின், சித்தராமையா உட்பட நான்கு பேர் மீதான அறிக்கை குறித்து முடிவு எடுப்பதாக, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் கூறி இருந்தார். கடந்த, 19ம் தேதி நடந்த விசாரணையின் போது, 23 ம் தேதியான நேற்றுவிசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், நேற்று நடந்த விசாரணையின் போது, முழு விசாரணை அறிக்கையைஅரசு தாக்கல் செய்யவில்லை. கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இருப்பினும், கடந்த விசாரணையின் போது நீதிபதி திட்டியதால் சுதாரித்த அரசு தரப்பு, முடா வழக்கில் முன்னாள் கமிஷனர் தினேஷ் குமாரிடம் நடத்திய விசாரணை அறிக்கையை, 'சீல்' வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பித்தது. இதையடுத்து அடுத்த விசாரணை ஜனவரி, 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.