உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீட்டு மனைக்காக 56 ஆண்டுகளாக மாஜி ராணுவ வீரர் மனைவி அலைக்கழிப்பு

வீட்டு மனைக்காக 56 ஆண்டுகளாக மாஜி ராணுவ வீரர் மனைவி அலைக்கழிப்பு

துமகூரு: முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, 56 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்தும் வீடு கிடைக்கவில்லை. இது, அதிகாரிகளின் அலட்சியத்துக்கு உதாரணமாக அமைந்துள்ளது என, லோக் ஆயுக்தா கண்டித்துள்ளது. துமகூரு நகரின் வட்டரஹள்ளி கிராமத்தில் வசித்த விருபாக்ஷா, இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர். இவருக்கு 1969ல் சுதந்திர போராட்டக்காரர்கள் ஒதுக்கீட்டில், 4 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. வட்டரஹள்ளியில், சர்வே எண் 26ல் இருந்த அந்த நிலம், குன்று மற்றும் வனப்பகுதியாக இருந்ததால் விவசாயத்துக்கு தகுதியானதாக இல்லை. இந்நிலத்துக்கு மாற்றாக வேறு நிலம் வழங்கும்படி, விருபாக்ஷா கோரியும் அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. வழங்கப்பட்ட நிலத்துக்கும் உரிமை பத்திரம் தரவில்லை. விருபாக்ஷா காலமான பின், அவரது மனைவி லலிதாம்பிகா, 89. மாற்று வீட்டு மனை அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட நிலத்துக்கு உரிமை பத்திரம் வழங்கும்படி, 56 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்கு அலைபாய்ந்தும் பயன் இல்லை. இத்தனை ஆண்டுகளாக அலைந்து செலவிட்ட பணத்தில், விவசாய நிலத்தையே வாங்கி இருக்கலாம் என, லலிதாம்பிகா அதிருப்தி தெரிவித்துள்ளார். அரசு அதிகாரிகளின் அலட்சியம் குறித்து, உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பாவிடம், சில நாட்களுக்கு முன்பு லலிதாம்பிகா புகார் அளித்திருந்தார். இப்புகாரை கடுமையாக கருதிய நீதிபதி வீரப்பா, அதிகாரிகளை வன்மையாக கண்டித்தார். 'நிலம் வழங்கி 56 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால் நிலம் வழங்கிய உத்தரவு, வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. அதிகாரப்பூர்வமாக நிலத்தை வழங்கவில்லை. பெயரளவில் அரசு நிலம் வழங்கியுள்ளது. குன்றில் நிலம் வழங்கியதன் நோக்கம் என்ன? அரசின் செயல் சுதந்திர போராட்ட தியாகி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு செய்த மோசடி அல்லாமல் வேறு என்ன? அன்றைய கலெக்டர், தாசில்தார் தவறு செய்துள்ளனர். இந்த விஷயத்தில் வருவாய்த்துறை அமைச்சர் தலையிட்டு, ராணுவ வீரரின் மனைவிக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும்' என, நேற்று முன் தினம் நீதிபதி உத்தர விட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை