மது பங்காரப்பா பெயரில் மோசடி போலி உதவியாளர் அதிரடி கைது
ஷிவமொக்கா: தொடக்க கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் அந்தரங்க உதவியாளர் என, நம்ப வைத்து, அரசு அதிகாரிகள் உட்பட பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பெற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மைசூரு நகரை சேர்ந்தவர் ரகுநாத், 38. இவர் தன்னை அமைச்சர் மது பங்காரப்பாவின் அந்தரங்க உதவியாளர் என அறிமுகம் செய்து கொண்டார். இவர் அரசு அதிகாரிகள், ஊழியர்களிடம் பணியில் இடமாற்றம் பெற்று தருவதாக நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்தார். இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால், இடமாற்றத்தை ரத்து செய்ய வைப்பதாக கூறி, பணம் பெற்றார். வேலை ஆசை அதேபோன்று, பொது மக்கள் பலரிடம், அமைச்சர் மூலமாக அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காண்பித்தார். அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில், பலரும் அவர் கூறிய வங்கி கணக்கில் பணம் போட்டனர். அமைச்சரின் பெயரில் மோசடி நடப்பது குறித்து, அமைச்சர் மது பங்காரப்பாவின் சிறப்பு அதிகாரி ஸ்ரீபதிக்கு தகவல் வந்தது. இவரும் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே கல்வித்துறை இணை இயக்குநர் பாரதியை, தொடர்பு கொண்ட ரகுநாத், 'உங்களை அரசு இடமாற்றம் செய்துள்ளது. எந்த இடம் என்பதை முடிவு செய்யவில்லை. நான் அமைச்சரின் அந்தரங்க உதவியாளர். அமைச்சருடன் பேசி, உங்களுக்கு சாதகமாக முடிவு செய்ய வைக்கிறேன். இதற்காக நீங்கள் பணம் தர வேண்டும்' என்றார். போலீசில் புகார் இவரது பேச்சு, இணை இயக்குநர் பாரதிக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியது. அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஸ்ரீபதியிடம் கூறினார். அதன்பின் ரகுநாத்தின் மொபைல் போன் எண்ணை வைத்து, விசாரித்த போது அவர் அமைச்சரின் அந்தரங்க உதவியாளர் அல்ல என்பது தெரிந்தது. இது குறித்து, சிறப்பு அதிகாரி ஸ்ரீபதி, அமைச்சரிடம் தகவல் கூறினார். அமைச்சரின் உத்தரவுபடி, ஷிவமொக்காவின், ஜெயநகர் போலீஸ் நிலையத்தில், புகார் செய்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, நேற்று முன் தினம் ரகுநாத்தை கைது செய்தனர். இது குறித்து, ஷிவமொக்கா எஸ்.பி., மிதுன்குமார், நேற்று அளித்த பேட்டி: ஜெயநகர் போலீஸ் நிலையத்தில், பதிவான புகார் தொடர்பாக, ரகுநாத் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மைசூரை சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தாசில்தாரின் மகன். இந்த செல்வாக்கை பயன்படுத்தி, மக்களிடம் தனக்கு அமைச்சர்களை தெரியும், எம்.எல்.ஏ.,க்களை தெரியும் என, கூறி, பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார். கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவின் அந்தரங்க உதவியாளர் என, கூறியும் ஏமாற்றியுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை தெரிந்து கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு, இடமாற்றத்தை ரத்து செய்ய வைப்பதாக நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்துள்ளார். இவர் மீது சிர்சியில் ஒன்று, ஷிவமொக்காவில் மூன்று வழக்குகளும் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.