உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அன்ன பாக்யா திட்டத்தில் வழங்கிய இலவச அரிசி கடத்தல்!

 அன்ன பாக்யா திட்டத்தில் வழங்கிய இலவச அரிசி கடத்தல்!

கடந்த, 2013ல் காங்கிரஸ் அரசில், சித்தராமையா முதல்வரான போது, அன்னபாக்யா திட்டத்தை செயல்படுத்தினார். அவர் பதவியேற்ற பின், அவர் அறிவித்த முதல் திட்டம் இது தான். ஏழைகள் பசியோடு அவதிப்பட கூடாது என்ற, நல்ல நோக்கத்தில் அன்னபாக்யா திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, பி.பி.எல்., குடும்பங்களுக்கு, தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. பின், 2023ல், இரண்டாவது முறையாக முதல்வரான போது, அன்னபாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி அளவை, 10 கிலோவாக அதிகரித்தார். அரிசி பற்றாக்குறை காரணமாக பயனாளிகளுக்கு, 5 கிலோ அரிசியும், 5 கிலோ அரிசிக்கு பதிலாக, பணமும் வழங்கப்படுகிறது. ஏழைகள் பசியோடு உறங்க கூடாது என்ற, நல்ல நோக்கத்தில் இதை செயல்படுத்தியது. இத்திட்டம் ஏழைகளின் வயிற்றை நிரப்புவதற்கு பதிலாக, மில் உரிமையாளர்கள், வியாபாரிகளின் பாக்கெட்டை நிரப்புகிறது. பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய அரிசியை, பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு கடத்தினர். அங்கு இந்த அரிசியை பாலிஷ் செய்து, உயர் தரமான அரிசியாக்கி, அதிக விலைக்கு விற்பது தெரிந்துள்ளது. சமீப நாட்களாக வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன், கொப்பாலில் கிட்டங்கி ஒன்றில், உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, துபாய்க்கு ஏற்றுமதி செய்ய மூட்டைகளில் நிரப்பப்பட்ட அன்னபாக்யா அரிசியை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். மூட்டைகளின் மீது துபாய் என, அச்சிடப்பட்டிருந்தது. அந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அன்னபாக்யா அரிசி கடத்தலை தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் பல இடங்களில், அரிசி பதுக்குவதை, கடத்தப்படுவதை, கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க முடியவில்லை. சில நாட்களுக்கு முன், கதக் நகரின் புறநகரில் சந்தேகத்திற்கிடமாக சென்ற லாரியை, போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அதில் 32 டன் அன்னபாக்யா அரிசி இருப்பது தெரிந்தது. அரிசியை மீட்ட போலீசார், லாரி ஓட்டுநரை விசாரித்த போது, அவர் வைத்திருந்த அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது தெரிந்து, அதிர்ச்சி அடைந்தனர். ஹாவேரி ஏ.பி.எம்.சி., பெயரில், போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அரிசியை மஹாராஷ்டிரா வழியாக கொண்டு சென்று, அங்குள்ள ஏஜன்டுகள் மூலமாக, கடல் வழியாக சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு அனுப்புவதும், விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. அன்னபாக்யா அரிசி கடத்தலில், மஹாராஷ்டிரா ஏஜன்டுகள் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. இதை பற்றி உணவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கதக் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: கதக், ஹூப்பள்ளி, கொப்பால் மாவட்டங்களில், அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இங்குள்ள அரிசி கடத்தல் கும்பல், மஹாராஷ்டிராவின், மொத்த விலை வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். அம்மாநில ஏஜன்டுகள், பாலிஷ் செய்த அரிசிக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அதன்படி, இங்குள்ள நபர்கள், அன்னபாக்யா அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கங்காவதி மற்றும் அதன் பகுதிகளில் உள்ள அரிசி மில்களில், பாலிஷ் செய்கின்றனர். இவற்றை லாரிகளில் மஹாராஷ்டிராவுக்கு அனுப்புகின்றனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கப்பலில் செல்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அன்னபாக்யா அரிசி, மஹாராஷ்டிராவுக்கு சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டது உண்மை தான். பல முறை சோதனையிட்டு டன் கணக்கில், அரிசியை கண்டுபிடித்தோம். அரிசி கடத்தலை கட்டுப்படுத்த, இப்போதைய நடவடிக்கை போதாது. மேலும் கடுமையான எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அரிசி கடத்துவதை கட்டுப்படுத்த, தீவிரமாக கண்காணிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Diraviam s
ஜூலை 20, 2026 17:15

அரிசி தேவைக்கு அதிகமாய் மக்களுக்கு கொடுக்கிறார்கள். தேவைபடுபவர்களுக்கு மாத்திரம் அரிசி கொடுத்தால் , கடத்தல் குறையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை