அரசு ஊழியர் குடும்பத்தினருக்கு அக்., 1ல் முதல் இலவச சிகிச்சை
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கும் 'ஆரோக்கிய சஞ்சீவினி' திட்டம், அக்டோபர் 1ம் தேதி துவக்கப்படுகிறது. கர்நாடகாவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு தனியார், சுகாதாரம் மற்றும் குடும்ப நல, மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க 'ஆரோக்கிய சஞ்சீவினி' என்ற பெயரில், பல ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் வகுக்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. இறுதியாக திட்டத்தை நிறைவேற்ற, தற்போது அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் 'ஆரோக்கிய சஞ்சீவினி' திட்டம் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 5.20 லட்சம் அரசு ஊழியர்கள், அரசின் உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் மூன்று லட்சம் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயனடைவர். இத்திட்டத்தை சுவர்ண ஆரோக்கிய சுரக் ஷா அறக்கட்டளை செயல்படுத்தும். திட்டத்திற்காக ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, அறக்கட்டளையின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியராக இருந்தால், யாருடைய சம்பள பங்களிப்பு வழங்க போகின்றனர் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். 'குரூப் ஏ' ஊழியர்களுக்கு 1,000 ரூபாய்; 'பி' ஊழியர்களுக்கு 500 ரூபாய்; 'சி' ஊழியர்களுக்கு 350 ரூபாய்; 'டி' ஊழியர்களுக்கு 250 ரூபாய் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் சேர விருப்பம் இல்லாத ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறவும் வாய்ப்பு உள்ளது.