| ADDED : நவ 27, 2025 07:34 AM
பல்லாரி: பல்லாரி மாவட்ட எஸ்.பி., ஷோபாராணி, நேற்று அளித்த பேட்டி: பல்லாரி நகரின், ராம்புராவை சேர்ந்தவர் சதீஷ், 20. அந்த்ராளு கிராமத்தில் வசிப்பவர் சிவு, 21. நண்பர்களான இவர்கள், தினமும் சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்களை சேகரித்து, விற்று பிழைப்பு நடத்தினர். இம்மாதம் 18ல், வழக்கம் போன்று பொருட்களை சேகரித்து விற்றதில், 2,000 ரூபாய் கிடைத்தது. இதில் 500 ரூபாய்க்கு மது வாங்கினர். இதை பல்லாரி நகர மேம்பாட்டு ஆணைய கட்டடத்தின் மாடியில் வைத்து, இருவரும் குடித்தனர். மிச்சமுள்ள 1,500 ரூபாயில் தன் பங்கை தரும்படி, சதீஷ் கேட்டார். ஆனால், குடிபோதையில் இருந்த சிவு, பணம் தர மறுத்ததால் இருவருக்கும் சண்டை நடந்தது. அப்போது சதீஷ் மதுபான பாட்டிலால், சிவுவின் மண்டை மற்றும் முகத்தில் தாக்கி கொலை செய்தார். அதன்பின் உடலை கீழ்ப்பகுதியில் வீசிவிட்டு தப்பியோடினார். ஏ.பி.எம்.சி., போலீசார் விசாரணை நடத்தி, பல்லாரி ரயில் நிலையத்தில் படுத்திருந்த சதீஷை, கைது செய்துள்ளனர். இவ்வாறு கூறினார்.