உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரில் விநாயகர் சிலைகள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக கரைப்பு

பெங்களூரில் விநாயகர் சிலைகள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாக கரைப்பு

பெங்களூரு: பெங்களூரில் வசந்த்நகர், சிவாஜிநகர், ஹலசூரில் பொது இடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட, விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. சிலை முன் இளைஞர்கள் ஆரவாரத்துடன் சென்றனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பெங்களூரு நகர் முழுதும் பொது இடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வசந்த்நகர், சிவாஜிநகர், ஹலசூரில் பொது இடங்களில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஹலசூரு ஏரியில் கரைக்கு நேற்று ஊர் வலமாக எடுத்து செல்லப்பட்டன. சிவாஜிநகரின் சிவன்ஷெட்டி கார்டன் நாகம்மா கோவிலில் இருந்து துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் சிவன்ஷெட்டி கார்டன், வீரபிள்ளை தெரு, ஜுவல்லரி தெரு, தருமராஜா கோவில் தெரு, திம்மையா சாலை, காமராஜ் சாலை, செயின்ட் ஜான்ஸ் ரோடு வழியாக ஹலசூரு ஏரிக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன. 6 லட்சம் சிலைகள் சிலைகள் எடுத்து செல்லப்பட்ட போது சிலைகள் முன்பு, இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். 'கணபதி பப்பா மோரியா' என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர். பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏரிகள், தெப்பக்குளங்கள், நடமாடும் டேங்கர் லாரிகள் ஆகியவற்றில் கடந்த 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை கரைக்கப்பட்ட மொத்த விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை 4.62 லட்சம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரே நாளில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வைத்து பார்க்கையில், மொத்தம் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ