பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ் 1,200 சதுர அடி வீட்டிற்கு ஓ.சி., வேண்டாம்
பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் எல்லைக்குள் 1,200 சதுர அடி வீட்டிற்கு ஓ.சி., எனும் ஆக்கிரமிப்பு சான்றிதழ் தேவை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரு இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்கள் இங்கு உள்ளன. வேலை தேடி வருவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட வேண்டும் என்றால், அதற்கான திட்ட அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து, உள்ளாட்சி அமைப்பிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து வீடு, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒப்புதல் அளிப்பர். கட்டுமான பணிகள் முடிந்ததும், உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து ஓ.சி., எனும் குடியேற்ற சான்றிதழ் வாங்க வேண்டும். இந்த சான்றிதழை வைத்து தான் மின், குடிநீர் இணைப்பு வாங்க வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக அமலில் இருந்தது. இந்நிலையில், குடியேற்ற சான்றிதழ் வாங்குவதில் இருந்து, அரசு சிறிய விலக்கு அளித்துள்ளது. அதாவது 1,200 சதுர அடியில் கட்டப்படும் வீடு, ஜி பிளஸ் 2 எனும் தரை, இரண்டு மாடியுடன் கட்டப்படும் வீடு, ஸ்டில்ட் பிளஸ் 3 எனும் தரைத்தளம், மூன்று மாடியுடன் கட்டப்படும் வீடுகளுக்கு, இனி குடியேற்ற சான்றிதழ் பெற தேவை இல்லை என்று, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக 1,200 சதுர அடிக்குள் வீடோ கட்டடமோ கட்டுவதற்கான வரைபட அறிக்கையை, ஜி.பி.ஏ.,விடம் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் இடத்தை நேரில் ஆய்வு செய்து அனுமதி கொடுப்பர். வீடு கட்டி முடிந்ததும், மீண்டும் ஒரு முறை ஆய்வு மேற்கொள்வர். இதற்கு பின் பெஸ்காம், குடிநீர் வாரியத்திற்கு சென்று, வீட்டிற்கான ஆவணங்களை காண்பித்து, மின், குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதுகுறித்து நகர்ப்புற மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதற்கட்டமாக ஜி.பி.ஏ., எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டட உரிமையாளர்கள் பலனடைவர். மின்சாரம், குடிநீர் இணைப்பு வாங்க நீண்ட நாட்களாக காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது' என்றனர்.