உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரு சாலைகளை மேம்படுத்த ரூ.1,100 கோடி ஒதுக்கியது அரசு

பெங்களூரு சாலைகளை மேம்படுத்த ரூ.1,100 கோடி ஒதுக்கியது அரசு

பெங்களூரு: பெங்களூரு சாலைகளை மேம்படுத்த 1,100 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. தகவல் தொழில்நுட்பம், பூங்கா நகரம் என்று பெயர் எடுத்த பெங்களூரை தற்போது, 'சாலைப் பள்ளங்களின் நகரம்' என்று கூறினால் தவறே இல்லை. அந்த அளவுக்கு நகரில் உள்ள அனைத்து சாலைகளுமே குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சி அளிக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்று, வாகன ஓட்டிகள் ஒவ்வொரு நாளும் சென்று வருகின்றனர். 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம்' அமைப்பதாக கூறி நாட்களை கடத்திய ஆட்சியாளர்கள், சாலை பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, பனந்துார் பகுதியில் பள்ளி வேன் ஒன்று, சாலையோர பள்ளத்தில் சிக்கி ஒரு பக்கமாக சாய்ந்தது. நல்ல வேளையாக வேனுக்குள் இருந்த 20 மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வேன், பள்ளத்தில் சாய்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அரசு அதிகாரிகள், நீதிபதிகள் வசிக்கும் ஜுடீசியல் லே - அவுட்டிலும் பள்ளங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அப்பகுதியை சேர்ந்த மூன்று பள்ளி மாணவியர், சாலையின் நிலை குறித்து வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து நகரின் சாலைப் பள்ளங்களை மூடவும், சாலைகளை மேம்படுத்தவும் 1,100 கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிதியில் நகரில் உள்ள 28 தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கு தலா 50 கோடி ரூபாயும், மேலும் 14 தொகுதிகளுக்கு தலா 25 கோடி ரூபாயும் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி சாலை மேம்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை