உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரூ.260 கோடி வாடகை பாக்கி வைத்த அரசு ரேஷன் பொருள் வினியோக லாரிகள் நிறுத்தம்

ரூ.260 கோடி வாடகை பாக்கி வைத்த அரசு ரேஷன் பொருள் வினியோக லாரிகள் நிறுத்தம்

பெங்களூரு: கர்நாடகாவில் லாரிகளின் உரிமையாளர்களுக்கு, 260 கோடி ரூபாய் வாடகையை அரசு பாக்கி வைத்துள்ளதால், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொது வினியோக திட்டத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.கர்நாடகாவில் அரசின் கூட்டுறவுத் துறை; சுய உதவி குழு; தனியாருக்கு உட்பட்டது என மொத்தம் 20,481 ரேஷன் கடைகள் உள்ளன. அன்னபாக்யா திட்டத்தின் கீழ் மக்களுக்கு, மாதம் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர கேழ்வரகு, சோளம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 4,500 லாரிகள் மூலம் மாதம் 4.50 லட்சம் டன் உணவுப் பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்த லாரிகளின் உரிமையாளர்களுக்கு, கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை ஆறு மாதங்களாக, வாடகை கொடுக்காமல், அரசு பாக்கி வைத்துள்ளது. இதனால் ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல லாரி உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். நேற்று முதல் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சொந்த பணம்

இதுகுறித்து கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா நேற்று அளித்த பேட்டி:கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் கடைகளுக்கு அரிசி, சோளம், கேழ்வரகு எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு வாடகையை அரசு செலுத்தவில்லை. மொத்தம் 260 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. ஆறு மாதங்களாக லாரி உரிமையாளர்கள் சொந்த பணத்தை பயன்படுத்தி, லாரிகளுக்கு டீசல் போட்டு அனுப்பி வைக்கின்றனர்.லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு, உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் 26,000 டிரைவர், கிளீனர்கள், மூட்டை துாக்கும் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு முன்பு, உணவுத் துறை செயலரை சந்தித்து 260 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தோம்.

அமைச்சர் பேச்சு

ஜூலை 6ம் தேதிக்குள் விடுவிப்பதாக கூறினார். ஆனால் கூறியபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம். அதன்படி நேற்று முதல் லாரி சேவையை நிறுத்தி வைத்துள்ளோம்.பணத்தை விடுவிக்கும் வரை யார் கூறினாலும், லாரிகள் ஓடாது. ஒரு வாரத்தில் பணம் விடுவிப்பதாக, உணவு அமைச்சர் முனியப்பா கூறி உள்ளார். அவரது பேச்சில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் இனி யாரையும் சந்திக்க மாட்டோம்.உணவு பொருட்களை எடுத்துச் செல்ல, அரசின் டெண்டரில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள், தலா 4 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்து உள்ளனர். அந்த பணத்தையும் இன்னும் திரும்ப தரவில்லை. இதுவும் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரை வர வேண்டி உள்ளது. எங்கள் கஷ்டத்தை முதல்வரும், துணை முதல்வரும் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதனால், பொது மக்களுக்கு அரிசி உட்பட ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !