உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் கடும் சரிவு

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் கடும் சரிவு

பெங்களூரு : கர்நாடகாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கடும் சரிவை சந்தித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது. கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களை வைத்து கழிப்பறை சுத்தம் செய்வது போன்ற பல காரணங்களால், பலரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. கல்வி கட்டணம் அதிகமாக இருந்தாலும், தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு, தனியார் பள்ளிகளும் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதன் விளைவாக, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமாக குறைந்து உள்ளது. இது தொடர்பாக, மாநில பள்ளி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகாவில் உள்ள அரசு தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளில், 2022 - 23 கல்வியாண்டில் 45,46,523; 2023 - 24ல் 42,94,461; 2024 - 25ல் 40,74,525 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். இந்த புள்ளி விபரங்கள் மூலம், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதை எடுத்து காட்டுகிறது. முந்தைய கல்வியாண்டுடன் 2024 - 25 கல்வியாண்டை ஒப்பிடுகையில், 2.19 லட்சம் மாணவர்களின் சேர்க்கை குறைந்து உள்ளது. அதே சமயம், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, 1.39 லட்சம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடக்க கல்வி அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து உள்ளது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். சேர்க்கை குறைந்த போதிலும், மாநிலத்தில் பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை. மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 2023 - 24ல், துமகூரு ஹூலிகலில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மட்டும் மூடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை