உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அரசு பள்ளிகள் மூடப்படாது: மது பங்காரப்பா திட்டவட்டம்

 அரசு பள்ளிகள் மூடப்படாது: மது பங்காரப்பா திட்டவட்டம்

பெலகாவி: ''எந்த காரணத்தை முன்னிட்டும், அரசு பள்ளிகள் மூடப்படாது. ஒரே ஒரு மாணவர் இருந்தாலும், அப்பள்ளி செயல்படும்,'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா மேல்சபையில் திட்டவட்டமாக தெரிவித்தார். மேல்சபை கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் உமாஸ்ரீ, பா.ஜ., உறுப்பினர் சிதானந்த கவுடா கேள்விக்கு பதில் அளித்து, அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது: மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் மாணவர்களை, பக்கத்து பள்ளிகளுக்கு அரசு மாற்றுவதாகவும், சில பள்ளிகள் மூடப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் அவப்பிரசாரம் செய்யப்படுகிறது. இதை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன, அரசு பள்ளிகள் மூடப்படும் என, எந்த இடத்திலும் கூறவில்லை. அவசியம் ஏற்பட்டால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவோம். அரசு பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுவது, வெறும் ஊகம். சில இடங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனாலும் அந்த பள்ளிகளுக்கு சீருடை, பாட புத்தகங்கள், மதிய உணவு வழங்குகிறோம். எந்த பள்ளியாவது இடையில் மூடப்பட்டதா. எங்கள் ரத்தத்தின் ஒவ்வொரு துளியிலும் கன்னடம் உள்ளது. எங்களுக்கும் மொழிப்பற்று உள்ளது. முந்தைய அரசுகள் அரசு பள்ளிகளை, எப்படிப்பட்ட மோசமான நிலைக்கு கொண்டு சென்றன என்பதை, நாங்கள் விவரித்தால் கதை எங்கோ செல்லும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, தேவையான ஊழியர்களை நியமித்த முதல் அரசு, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுதான். பா.ஜ., அரசு நடக்கும் மத்திய பிரதேசத்தில், எத்தனை அரசுப்பள்ளிகள் மூடப்பட்டன என்பதை, இந்த சபையில் நான் கூற வேண்டும். மொத்த நாட்டிலேயே, கர்நாடகாவில் தான் அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தரமான கல்வி, சைக்கிள் உட்பட அனைத்தும் வழங்கப்படுகிறது. எங்காவது அரசு பள்ளி மூடப்பட்டிருந்தால், ஆதாரங்களுடன் தகவல் தாருங்கள். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, மாநிலத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள பேரூராட்சிகளில் கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறந்துள்ளோம். நான் சொல்லாத விஷயத்தை, சொன்னதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பியுள்ளனர். 500 கே.பி.எஸ்., பள்ளிகளை அரசு திறக்கும் என, நான் கூறியபடி பள்ளிகள் திறக்கப்பட்டன. இது எங்கள் அரசின் சாதனை இல்லையா. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை