ஆண்டுதோறும் 2,000 சிறார்கள் கடத்தல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கவலை
பெங்களூரு: ''அரசு புள்ளி விபரங்களின்படி, கர்நாடகாவில் ஆண்டு தோறும் 2,000க்கும் மேற்பட்ட சிறார்கள் காணாமல் போவது, கவலை அளிக்கிறது,'' என, கவர்னர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார். பெங்களூரின், ராஜ்பவனில் இந்திய நர்ஸ்கள் மற்றும் அலைடு சங்கம் சார்பில், சிறார்கள் கடத்தல் குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும், 'கிரஹசுத்தி' என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை கவர்னர் தாவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: அரசு புள்ளி விபரங்களின்படி, கர்நாடகாவில் ஆண்டு தோறும் 2,000க்கும் மேற்பட்ட சிறார்கள் காணாமல் போகின்றனர். இது கவலை அளிக்கும் விஷயமாகும். காணாமல் போன சிறார்களில், 10 சதவீதம் சிறார்கள் கண்டுபிடிக்கப்படுவது இல்லை. ஆண்டுக்கு 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களின் பிள்ளைகளை நிரந்தரமாக இழக்கின்றனர். சில சிறார்கள் பள்ளிக்கு, டியூஷனுக்கு செல்லும் போதும், சிலர் விளையாடும் போதும் காணாமல் போகின்றனர். நாட்டில் 40 சதவீதம் பேர், 18 வயதுக்கும் குறைவானவர்கள். சமீப நாட்களாக சிறார்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. கர்நாடகா போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள், வளரும் மாநிலங்களில் சிறார்கள் கடத்தல் பெரும் சவாலாக உள்ளது. இது சமுதாயத்துக்கு கேடான விஷயமாகும். கடத்தப்பட்ட சிறார்களில், சிறுமியரே அதிகம் உள்ளனர். இவர்களை பாலியல் பலாத்காரத்துக்கு, குழந்தை தொழிலாளர்களாக்க, உடல் உறுப்புகளை திருட, பிச்சையெடுப்பதில் ஈடுபடுத்த கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. காணாமல் போன சிறார்களை கண்டுபிடிக்க, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, சிறப்பு செயற்படை அமைத்துள்ளன. பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணை நடத்துகின்றன. சந்தேகத்துக்கு இடமானவர்களை கண்காணிக்கின்றனர். சிறார்கள் கடத்தலை தடுக்க, பெற்றோர், பள்ளிகள், கல்லுாரிகள், பொது மக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், உள்ளாட்சிகள் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும். பெற்றோர் மற்றும் சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தி, பள்ளி சிறார்களை பாதுகாப்பதுடன், கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.