அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவே ஜி.பி.ஏ., முதல்வர் சித்தராமையா பேச்சு
பெங்களூரு: அதிகாரத்தை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கவே ஜி.பி.ஏ., அமைக்கப்பட்டதாக, முதல்வர் சித்தராமையா கூறினார். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் தலைவராக உள்ள முதல்வர் சித்தராமையா தலைமையில், அதன் முதல் ஆலோசனை கூட்டம், தலைமை அலுவலகத்தில் உள்ள கெம்பேகவுடா அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: பெங்களூரு இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்கள், இங்கு முதலீடு செய்வதுடன், வாழ்க்கையும் கட்டமைத்துள்ளனர். நகரின் மக்கள்தொகை 1.40 கோடி. இவ்வளவு பெரிய நகரத்தை, ஒரு மாநகராட்சியால் மட்டும் சரியாக நிர்வகிக்க முடியாது என்று விவாதம் நடந்தது. இதனால் ஜி.பி.ஏ., அமைத்து, ஐந்து மாநகராட்சிகளை உருவாக்கி உள்ளோம். மக்களுக்கு உகந்த நிர்வாகம், விருப்பங்களை நிறைவேற்ற ஜி.பி.ஏ., அமைத்தோம். இதன் மூலம் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும். வரும் நாட்களில் நகர மக்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகள் கொடுக்கப்படும். நகரை சுத்தமாக வைத்திருக்கவும், நகரின் அழகை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். வரும் நாட்களில் பி.டி.ஏ., - குடிநீர் வடிகால் வாரியம் - பெஸ்காம் - மெட்ரோ நிர்வாகம் ஆகியவையும், ஜி.பி.ஏ.,வுடன் ஒருங்கிணைந்து செயல்படும். தங்கள் அதிகார வரம்பில், வரி வசூலை மாநகராட்சி கமிஷனர்கள் அதிகரிக்க வேண்டும். குப்பை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுங்கள். நடைபாதைகளை முடிந்தவரை அகலமாக்க நடவடிக்கை எடுங்கள். அதிகாரிகள், கான்ட்ராக்டர்களுடன் இணைந்து செயல்பட்டால், தரமான பணிகளை செய்ய முடியாது. ஜி.பி.ஏ., அமைக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இல்லை. பெங்களூரின் மக்கள் பிரதிநிதிகள் இங்கு வந்து, தங்கள் கருத்துகளை, சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்பு உண்டு. சிலர் வரவில்லை. அப்படிப்பட்டவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். இவ்வாறு பேசினார்.
நிதி வரம்பு அதிகரிப்பு
கூட்டத்திற்கு முன், துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி: ஜி.பி.ஏ., அமைக்க உதவிய அதிகாரிகள், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி. ஐந்து மாநகராட்சிகளுக்கும் தனித்தனி அலுவலகம் கட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கட்டட வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும். மாநகராட்சிகளின் செலவினங்களுக்கான நிதி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கமிஷனர்கள் செலவு வரம்பு ஒரு கோடி ரூபாயில் இருந்து, மூன்று கோடி ரூபாயாகவும், நிலைக்குழு செலவு வரம்பு மூன்று கோடி ரூபாயில் இருந்து ஐந்து கோடி ரூபாயாகவும், மேயர்களின் செலவு வரம்பு 5 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாயாகவும் உயர்த்தி உள்ளோம். பெங்களூரு நகரில் மேம்பாட்டுப் பணிகளை செய்ய திட்டமிடும் பொறுப்பு, பி.டி.ஏ.,விடம் இருந்தது. தற்போது அந்த பொறுப்பு ஜி.பி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.