உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிரஹலட்சுமி திட்டம் நிறுத்தப்படாது தினேஷ் கூலிகவுடா திட்டவட்டம்

 கிரஹலட்சுமி திட்டம் நிறுத்தப்படாது தினேஷ் கூலிகவுடா திட்டவட்டம்

பெங்களூரு: ''கிரஹலட்சுமி திட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்து, தகுதியானவர்களுக்கு மட்டுமே, திட்டத்தின் பயன் கிடைக்க செய்வோம். இத்திட்டத்தை நிறுத்தும் எண்ணம், அரசுக்கு இல்லை,'' என, கர்நாடக வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தும் வாரிய துணைத்தலைவர் தினேஷ் கூலிகவுடா தெரிவித்தார். இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: கிரஹலட்சுமி திட்டத்தை பற்றி, எதிர்க்கட்சியினர் தேவையின்றி பேசுகின்றனர்; பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டுகளில், எந்த உண்மையும் இல்லை. மாநிலத்தின், 1.24 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப தலைவியருக்கு, மாதந்தோறும் தலா 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. திட்டத்தின் பயளானிகளாக இருந்த, 1.95 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இறந்துள்ளனர். சில தொழில்நுட்ப காரணங்களால், இறந்தவர்களின் வங்கி கணக்குகளுக்கு, இப்போதும் உதவித்தொகை செல்வது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. திட்டம் தவறாக பயன்படுத்துவதை தவிர்க்கவும், தகுதியான பயனாளியருக்கு திட்டத்தின் பலன் கிடைக்க செய்ய வேண்டும் என, முந்தைய முதல்வர் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுத்தேன். பயனாளியர் உயிரோடு உள்ளதாக சான்றிதழ் தாக்கல் செய்வதை, கட்டாயமாக்கும்படி பரிந்துரைத்தேன். அதே போல, இன்றைய முதல்வர் சிவகுமாரிடமும், திட்டத்தின் குளறுபடிகளை சரி செய்து, இறந்தவர்கள், தகுதியற்றவர்களை திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டு, திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, முடிவு செய்துள்ளார். எந்த காரணத்தை கொண்டும், திட்டம் நிறுத்தப்படாது. எதிர்க்கட்சியினர், அரசியல் நோக்கில், பிரசாரம் செய்கின்றனர். இதை மக்கள் நம்பக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !