குண்டுலுபேட் தமிழ் சங்க செயலர் காலமானார்
குண்டுலுபேட்: குண்டுலுபேட் தமிழ்ச் சங்க செயலர் வி.பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் காலமானார். இன்று இறுதிச் சடங்கு நடக்கிறது. சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட் பகுதியை சேர்ந்தவர் வி.பாலகிருஷ்ணன், 63. குண்டுலுபேட் தமிழ்ச் சங்க செயலராகவும், கர்நாடக தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு செயலராகவும், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவையின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். குண்டுலுபேட் தமிழ்ச் சங்கத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பல ஆண்டுகளாக சேவை செய்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், தமிழகத்தின் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். அவரது உடல், நேற்று மாலை குண்டுலுபேட் கொண்டு வரப்பட்டது. இன்று பொது மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இறுதிச் சடங்கு இன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது. எப்போதும், தமிழர், தமிழ் நலனுக்காக பாடுபட்ட அவரது மறைவுக்கு மைசூரு, சாம்ராஜ் நகர், குண்டுலுபேட், கொள்ளேகால், ஹனுார் தமிழ்ச் சங்கம், எச்.டி.கோட்டே, ஹூன்சூர், தென்கன்னடா தமிழ்ச் சங்கம் உட்பட பல தமிழ் அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.