ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் வீட்டில் ரெய்டு எஸ்.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பெங்களூரு:தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் வீட்டில் ரெய்டு நடத்தியது தொடர்பாக விளக்கம் கேட்டு, அம்மாவட்ட எஸ்.பி., அருணுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த மே மாதம் பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி கொலைக்கு பின், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பதற்றமாகவே உள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய கடலோர மாவட்டங்களை கண்காணிக்கும் வகையில் மாநில அரசும் சிறப்பு அதிரடிப்படையை அமைத்தது.இதையடுத்து, மாவட்டம் முழுதும் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து பிரமுகர்களின் வீடுகளில், போலீசார் நள்ளிரவு நேரத்தில் ரெய்டு நடத்தி, சம்பந்தப்பட்ட பிரமுகர்களை புகைப்படம் எடுத்துச் சென்றனர்.இதுபோன்று உப்பினங்கடியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ராதா பட், 55, என்பவர் வீட்டில், ஜூன் 1ம் தேதி போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போது அவரை புகைப்படம் எடுத்திருந்தனர்.போலீசாரின் அத்துமீறலை கண்டித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ராதா, மனுத் தாக்கல் செய்தார். மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:மங்களூரு உப்பினங்கடியில் உள்ள என் வீட்டில், ஜூன் 1ம் தேதி நள்ளிரவு, போலீசார் ரெய்டு நடத்தினர். எதற்காக ரெய்டு நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, மூத்த அதிகாரிகளின் உத்தரவின்படி, ரெய்டு நடத்துகிறோம் என்றனர்.ரெய்டு நடத்துவதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என்று கேட்டபோது, தர மறுத்துவிட்டனர். என்னை குற்றவாளி போன்று நடத்தினர்.இது என் கவுரவத்தை பாதித்துள்ளது. மேலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தி உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.இம்மனு மீதான விசாரணை, நேற்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சுனில் தத் முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி, ''மாவட்ட எஸ்.பி., அருணுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த ரெய்டு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். சட்டத்தை, போலீசார், தங்கள் கையில் எடுக்கக் கூடாது,'' என்றார்.கர்நாடக மாநில போலீஸ் புகார்கள் ஆணையம், தேசிய மனித உரிமைகள் கமிஷனிலும் ராதா பட் புகார் அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, இவ்விரு அமைப்புகளும் மாவட்ட எஸ்.பி., அருண் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.