உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / விவசாயிகளின் நிவாரண நிதிக்கு ஜி.எஸ்.டி., நோட்டீஸ்களை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

விவசாயிகளின் நிவாரண நிதிக்கு ஜி.எஸ்.டி., நோட்டீஸ்களை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: 'அரசு மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாயிகள் உட்பட மற்றவர்களின் நிலத்தை கையகப்படுத்தியதற்காக வழங்கப்படும் நிவாரண நிதிக்கு ஜி.எஸ்.டி., விதிக்கக் கூடாது' என, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.பெங்களூரில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக, சில ஆண்டுகளுக்கு முன்பு கே.ஐ.ஏ.டி.பி., எனும் கர்நாடக தொழிற்பகுதி மேம்பாட்டு ஆணையம், பெங்களூரு நகரின் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் உட்பட, பலருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியது. நிலத்துக்கு நிவாரண தொகை வழங்கியது.இந்த நிவாரண தொகைக்கு, ஜி.எஸ்.டி., செலுத்தும்படி, விவசாயிகளுக்கு வர்த்தக வரித்துறை நோட்டீஸ் அளித்தது. இந்த நோட்டீசிற்கு ஆட்சேபம் தெரிவித்த விவசாயிகள், தங்களின் நிவாரண தொகைக்கு, ஜி.எஸ்.டி., விதிப்பது சரியல்ல. நோட்டீசை திரும்பப் பெறும்படி வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் வர்த்தக வரித்துறை பொருட்படுத்தவில்லை.வர்த்தக வரித்துறை நோட்டீசை ரத்துச் செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் மனுத் தாக்கல் செய்தனர். மனு தொடர்பாக விசாரணை நடந்தது. வாதம், பிரதிவாதங்களை நீதிமன்றம் கேட்டறிந்தது.விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி கிருஷ்ண குமார் பிறப்பித்த தீர்ப்பு:மனுதாரர்கள் மற்றும் கே.ஐ.ஏ.டி.பி.இ., இடையே நடந்த ஒப்பந்தத்தில், சில நிபந்தனைகள் இருக்கலாம். ஆனால் அதற்கும், மனுதாரர்களுக்கு அளித்த நிவாரண தொகைக்கும் சம்பந்தம் இல்லை.நிலத்தை கொடுத்த விவசாயிகள், அதற்கு மாற்றாக நிவாரணம் பெற்றனர். இதற்கு ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. நிலத்தை திட்டத்துக்கு கொடுக்க, விருப்பம் இல்லை என்றாலும் உணர்வுப்பூர்வமான பந்தம் உள்ள நிலத்தை கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஜி.எஸ்.டி., விதிக்கக் கூடாது.இவ்வாறு கருத்துத் தெரிவித்து, விவசாயிகளுக்கு வர்த்தக வரித்துறை அளித்த நோட்டீசை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி