டிஜிட்டல்மயமாகும் சுகாதார மையங்கள்: அமைச்சர் காதர் தகவல்
தட்சிண கன்னடா: ''மாநிலத்தில் உள்ள 183 தாலுகா மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும்,'' என, சுகாதார துறை அமைச்சர் காதர் தெரிவித்தார். தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: இன்றைய நவீன மற்றும் தொழில்நுட்ப யுகத்தில், சுகாதார துறையை காகிதம் இல்லாத மற்றும் டிஜிட்டல் மயமாக்குவதே அரசின் நோக்கம். இணையதளம் இணைப்பு இல்லாமல், மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்க முடியாது என்பதால், மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகளுக்கு அதிவேக இணையதளம் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 40 மருத்துவமனைகளில் முன்னோட்டம் அடிப் படையில் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில், 183 தாலுகா, சமூக சுகாதார மையங்களுக்கும் விரிவு படுத்தப்படும். முன்னோட்டமாக மென்பொருளை செயல்படுத்தும் வாய்ப்பு, நான்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந் நிறுவனங்களில் சிறப்பாக செயல்படுவதை பொறுத்து, டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு நோயாளி, மருத்துவமனைக்கு வந்ததும், அவரின் ரத்த அழுத்தம், நீரிழிவு அளவு, மருத்துவ வரலாறு, ஆய்வக அறிக்கைகள், மருந்து விபரங்கள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்கள், எதிர்காலத்தில் அந்த நோயாளி, வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும், அவரது முழு மருத்துவ வரலாறு மருத்துவருக்கு கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நோயாளிகளுக்கு, கட்டணமில்லா ரசீது வழங்கப்படும். இது அவர்களது சிகிச்சைக்காக, அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது என்பதை நோயாளிகள் புரிந்து கொள்ள உதவும். அத்துடன், இந்த செயல்பாட்டில் வெளிப்படை தன்மையும் கொண்டு வரப்படும். மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள தாலுகா, சமூக சுகாதார மையம் அளவிலான மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு அவசர சிகிச்சையும் உறுதி செய்ய புதிய அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.