உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஹீலியம் பலுான்களுக்கு மைசூரு நகரில் தடை

 ஹீலியம் பலுான்களுக்கு மைசூரு நகரில் தடை

மைசூரு: மைசூரு நகரில் ஹீலியம் பலுான்களை விற்க, நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் தடை விதித்துள்ளார். கலாசார நகரமான மைசூருக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருவர். அதில் முக்கியமான இடமாக அரண்மனை விளங்குகிறது. இந்த அரண்மனையை காண, சுற்றுலா பயணியர் வந்து கொண்டே இருப்பர். அரண்மனை வளாகத்தின் வெளிப்பகுதியை சுற்றிலும் சிற்றுண்டி கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் கடை, பலுான் கடை என பல்வேறு கடைகள் உள்ளன. கடந்தாண்டு டிசம்பரில் அரண்மனை வளாகத்தில் ஹீலியம் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அரண்மனை வளாகம் வெளியே நடைபாதையில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: மைசூரு நகர போலீசுக்கு உட்பட்ட பொது இடங்கள், சாலைகள்; அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை உட்பட சுற்றுலா மையங்கள்; திருவிழாக்கள், கண்காட்சிகள் நடக்கும் இடங்கள்; பொது விழாக்கள், கலாசாரா நிகழ்ச்சிகள்; மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்களில் ஹீலியம் பலுான்கள் விற்க தடை விதிக்கப்படுகிறது. ஹீலியம் வாயு வெடிக்கும் தன்மை கொண்டதுடன், தீ விபத்தையும் ஏற்படுத்தும். சிறு குழந்தைகள் விளையாடும் பலுான்களில் இத்தகைய வாயுவை பயன்படுத்துவது பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மைசூரு போலீசின் இம்முடிவு, சுற்றுலா பயணியர், உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ