உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ் ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ் எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பஸ் ஊழியர் வேலை நிறுத்தம் வாபஸ் எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

பெங்களூரு: போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதால், இது தொடர்பான பொதுநல மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. ஊதிய உயர்வு, 38 மாத நிலுவை தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 5ம் தேதி முதல் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, ஆக., 4ல் விசாரணைக்கு வந்தது. போராட்டத்தை ஒரு நாள் தள்ளிவைக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கூட்டமைப்பு தலைவர் அனந்தசுப்பா ரெட்டி, 'எங்கள் கைக்கு நீதிமன்ற உத்தரவு நகல் வரவில்லை' என்று கூறினார். அதற்குள், 4ம் தேதி மாலையே வேலை நிறுத்தத்தை, போக்குவரத்து ஊழியர்கள் துவக்கிவிட்டனர். மறுநாள் பஸ்கள் கிடைக் காததால், பொது மக்கள் சிரமப்பட்டனர். 5ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'நீதிமன்ற உத்தரவை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிமன்றம், 'கூட்டமைப்பினர், ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய்வதுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்' என்று எச்சரித்தது. இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அனந்த சுப்பா ரெட்டி அறிவித்தார். இந்நிலையில், வேலை நிறுத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொழிற்சங்கங்கள் சார்பில் வக்கீல் வாதிடுகையில், 'வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு விட்டது. இது தொடர்பான தீர்மானம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது' என்றார். அரசு வக்கீல் வாதிடுகையில், 'தொழிற்சங்கங்களுடனான பேச்சு நேற்று நடந்தது. அடுத்த பேச்சு, ஆக., 28ம் தேதி நடக்க உள்ளது' என்றார். பொதுநல மனுத் தாக்கல் செய்தவர் சார்பில் வாதிட்ட வக்கீல், 'வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டாலும், வரும் நாட்களில் இதே நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான தீர்வு காண, அரசுக்கு காலக்கெடு விதிக்க வேண்டும்' என்றார். நீதிபதிகள் கூறுகையில், 'தொழிற்சங்கங்களுடன் அரசு பேச்சு நடத்தட்டும். தற்போது வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ