ஜாலி எல்.எல்.பி., - 3க்கு எதிராக வழக்கு மனுதாரருக்கு ஐகோர்ட் ரூ.50,000 அபராதம்
பெங்களூரு: இன்று வெளியாக உள்ள ' ஜாலி எல்.எல்.பி., - 3 ' திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கூறி, மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் நடித்துள்ள, ' ஜாலி எல்.எல்.பி., - 3 ' திரைப்படம் இன்று வெளியாகிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. எதிராக மனு இந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி, பெங்களூரு மஞ்சுநாத் நகரை சேர்ந்த சையது என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், ' ஜாலி எல்.எல்.பி., 3 திரைப்படத்தில் வரும் வசனங்களும், காட்சிகளும் அவதுாறாகவும், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறுவதாகவும் உள்ளன. 'எனவே, படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோர் ஊடகத்தினர் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு நீதிபதி ஜோஷி அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ' ஜாலி எல்.எல்.பி., 3 திரைப்படத்தின் டீசர், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் ஒரு காட்சியில் நீதிபதிகள், வக்கீல்களை இழிவுபடுத்தும் வசனங்கள் உள்ளன. அது நீதித்துறையின் புனிதத்தை கெடுக்கிறது' என்றார். பின், நீதிபதிகள் கூறியதாவது: இத்திரைப்படம் நகைச்சுவை திரைப்படம். இந்த நகைச்சுவை உணர்வு, உங்களையும், எங்களையும் ஈர்க்காமல் போகலாம். அதற்காக படத்தை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகள் மூலம், நகைச்சுவை உணர்வை கொண்டு பார்வையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உங்களை ஈர்க்கவில்லை என்பதற்காக, படைப்பாற்றலை அடக்கி, தணிக்கை செய்ய உத்தரவிட முடியாது. இதுபோன்ற பொதுநல வழக்குகள், நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பதாகவே கருதப்படுகிறது. ஏதோ ஒரு நோக்கத்துக்காக, இம்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அபராதம் எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை, உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் டிபாசிட் செய்ய வேண்டும். அபராத தொகை செலுத்தவில்லை என்றால், மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அக்., 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு இம்மனு பட்டியலிடப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஜாலி எல்.எல்.பி., - 3 திரைப்பட போஸ்டர்