கைதிகளுக்கு போன் கடத்திய மருத்துவமனை ஊழியர்கள் கைது
பெங்களூரு: கைதிகளுக்கு மொபைல் போன் வழங்கிய, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரின், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் மருத்துவமனையில் நவ்யஸ்ரீ, 33, ஸ்ருஜன், 33, கவுன்சிலிங் ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர்.நவ்யஸ்ரீ நேற்று முன் தினம் வழக்கம் போன்று, பணிக்கு வந்தார். தன் கைப்பையில் மொபைல் போனை மறைத்து வைத்து, சிறைக்குள் செல்ல முயற்சித்தார். சிறை நுழைவாசலில் இருந்த பாதுகாப்பு ஊழியர், நவ்யஸ்ரீயின் கைப்பையை சோதனையிட்டபோது, மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, அவரிடம் விசாரித்தபோது, கைதிகளுக்காக கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டார். இந்த மொபைல் போனை தன்னுடன் பணியாற்றும் ஸ்ருஜன் கொடுத்தாக, நவ்யஸ்ரீ கூறினார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.