கர்நாடகாவில் தமிழ் கல்வியை வளர்ப்பது எப்படி? ஆலோசனைகளை அள்ளி வழங்கிய ஆர்வலர்கள்
பெங்களூரு : கர்நாடகத்தில் தமிழ் படிப்பதில் உள்ள சவால்கள் குறித்து நடந்த கருத்தரங்கில், தமிழ் கல்வியை வளர்ப்பதற்கான ஆலோசனைகளை பலரும் வழங்கினர். கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், 'கர்நாடகத்தில் தமிழ்க் கல்வி சவால்களும் தீர்வுகளும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நேற்று, ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. பல தமிழ் அமைப்புகளை சேர்ந்தோர், பெங்களூரில் பல பகுதிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். கர்நாடக தமிழ் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் தனஞ்செயன்: கர்நாடகாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு, 17 மாவட்டங்களில் 6,000 தமிழ் ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது, 300க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளனர். 10 பள்ளிகள் இருந்த இடத்தில், தற்போது ஒரு பள்ளி தான் உள்ளது. காலியான தமிழ் ஆசிரியர்கள் பணி இடங்கள் நிரப்பப்படுவதில்லை. தமிழ் பள்ளி, கல்வி அழிந்து வருகிறது. கர்நாடகாவில் எவ்வளவு தமிழர்கள் உள்ளனர் என்பது குறித்த எண்ணிக்கை இல்லை. ஒற்றுமை பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்றம் இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்தியாயினி: கர்நாடகாவில் ஒரு காலத்தில் பெரிய கல்வி நிறுவனங்களில் தமிழ் கற்றுத்தரப்பட்டது. தற்போது, சில அரசு பள்ளிகளில் மட்டுமே கற்றுத்தரப்படுகிறது. தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கு அரசியல் உட்பட பல காரணங்கள் உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் மொழியாக தமிழ் உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெறும் 324 மாணவர்கள் மட்டுமே எழுதி உள்ளனர். பெங்களூரு தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன்: கர்நாடகா அரசு, தமிழ் கல்விக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை. தமிழை கட்டாய பாடமாக மாற்ற வேண்டும். தமிழ் பள்ளிகளை கண்காணிக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டும். உருது பள்ளிகளை மூடக்கூடாது என்பதில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக உள்ளனர். அந்த ஒற்றுமை நம்மிடத்திலும் வர வேண்டும். அச்சம் தாய் மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார்: தமிழில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். பாரதி வித்யாலாயா பள்ளியில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கினோம். அப்போது, மாணவர்களிடம் உள்ள தமிழ் உணர்வை பார்த்தேன். தமிழக மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க, வாகன உதவி செய்ய தயாராக உள்ளேன். திம்மையா சாலை அரசு தமிழ் பள்ளி ஆசிரியை நாகசுந்தரி: அடுத்த தலைமுறைக்கு தமிழ் படிக்க தெரியுமா என்பதே தெரியவில்லை. கொலையை தவிர அனைத்து சமூக விரோத செயல்களும் என் பள்ளியில் நடக்கின்றன. மாணவர்களை சேர்க்க பெற்றோர் பயப்படுகின்றனர். பெற்றோர் வீட்டிலேயே, தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுத, படிக்க கற்றுக் கொடுங்கள். தமிழ் அரசு பள்ளிகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். யார், யார்? சமூக ஆர்வலர் தமிழடியான், கஸ்துாரி நகர் சிவராமன், தமிழ் திறனாளர்கள் சங்க தலைவர் ராஜகுரு, ஆஸ்பார்ன் ரோடு முதலியார் சங்க துணை செயலர் சண்முகம், உலக தமிழ் கழக பொருளாளர் அரசு, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் செயற்குழு உறுப்பினர் ஆடல் அரசு, ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசு, திருநெல்வேலி குடும்ப கூட்டமைப்பின் செயலர் சங்கரதாஸ், மைசூரு தமிழ் சங்க முன்னாள் பொருளாளர் துரை, சர்வக்ஞர் - திருவள்ளுவர் நற்பணி மன்ற தலைவர் சரவணன், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தலைவர் சி.ராஜன் உட்பட பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
தமிழ் எழுத, படிக்க பயிற்சி
'இல்லந்தோறும் தமிழ்' எனும் திட்டம் மூலம் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து வார விடுமுறை நாட்களின் இரவில் தமிழ் எழுத, படிக்க கற்றுத்தரப்படும். கர்நாடக தமிழ் கல்வி செயல்பாட்டுக்குழு அமைக்கப்படும். இக்குழு தலைவராக லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளி தாளாளர் மதுசூதனபாபு தற்காலிகமாக நியமிக்கப்படுவார். கர்நாடகாவில் தமிழ்க்கல்வியின் நிலை குறித்து அறிய, உண்மை கண்டறியும் குழு உருவாக்கப்படும். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் கர்நாடக தமிழ் கல்வி பிரமாண்ட மாநாடு நடக்கும். இதில், கர்நாடக தமிழ்க்கல்வி செயல்திட்ட பிரகடனம் வெளியிடப்படும்.