மனைவியின் ஆபாச படங்களை வைத்திருந்தவரை கொன்ற கணவர் கைது
மங்களூரு: தன் மனைவியின் ஆபாச வீடியோவை, மொபைல் போனில் சேகரித்து வைத்திருந்த சக தொழிலாளியை, இரும்புத்தடியால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் லட்சுமண் என்ற லக்கன், 30, முகேஷ் மண்டல், 27. இவர்கள் தட்சிணகன்னடா மங்களூரு நகரின் சுரத்கல்லின் முக்கா கிராமத்தில் தனியார் லே - அவுட்டில் வசித்து வந்தனர். இருவரும் ஒரே இடத்தில் கூலி வேலை செய்தனர். ஜூன் 24ம் தேதி, முகேஷ் மண்டல் திடீரென மாயமானார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மங்களூரு நகர் போலீசார் விசாரித்தனர். முகேஷ் பணியாற்றிய லே - அவுட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அவரது உடல் அழுகிய நிலையில் ஆகஸ்ட் 21ல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி முகேஷ் மண்டலை கொலை செய்தது, அவருடன் பணியாற்றிய லட்சுமண் என்பதை கண்டுபிடித்தனர். கொலை செய்த பின் தலைமறைவாக இருந்த அவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். முகேஷும், லட்சுமணும் ஜூன் 24ல் இரவு 9:00 மணிக்கு கட்டுமான கட்டடத்தில் பார்ட்டி நடத்தினர். அப்போது முகேஷ், தன் மொபைல் போனில் சேகரித்து வைத்திருந்த, லட்சுமணின் மனைவியின் ஆபாச படங்களை காண்பித்தார். இதை பார்த்து கொதிப்படைந்த லட்சுமண், அங்கிருந்த இரும்புத்தடியால் முகேஷின் மண்டையில் அடித்துக் கொலை செய்தார். உடலை கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடிவிட்டு தப்பியோடியதை ஒப்புக்கொண்டார்.