உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  அழகான மனைவி மீது சந்தேகம் கத்தியால் குத்திய கணவர் கைது

 அழகான மனைவி மீது சந்தேகம் கத்தியால் குத்திய கணவர் கைது

ஹாசன்: மனைவி அழகாக இருந்ததால் நடத்தையில் சந்தேகித்து அவரை கத்தியால் குத்திய கணவர், கைது செய்யப்பட்டார். ஹாசன் நகரின், ஜோடி கிருஷ்ணாபுரா கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ், 32. கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரோஜா, 28. லாரி ஓட்டுநரான உமேஷ், ரோஜாவை காதலித்தார். அவரது பின்னால் சுற்றி, கவர்ச்சிகரமாக பேசி தன்னை காதலிக்க வைத்தார். இரண்டு குடும்பங்களும் சம்மதித்து, எட்டு ஆண்டுகளுக்கு முன், இவர்களுக்கு திருமணம் நடந்தது. மகள் நன்றாக வாழ வேண்டும் என்பதால், ரோஜாவின் பெற்றோர் தாராளமாக வரதட்சணை கொடுத்தனர். தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ரோஜா மிகவும் அழகாக இருந்த காரணத்தால், மனைவியின் நடத்தையில் உமேஷுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. பணத்தாசையும் அதிகரித்தது. இதன் விளைவாக மனைவியை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். ரோஜா தன் தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கி வந்து கொடுத்தும், கணவருக்கு திருப்தி இல்லை. மனைவி மீது ஏற்பட்ட சந்தேகமும் போகவில்லை. கணவரின் தொல்லை தாங்காமல், ரோஜா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கணவரை விவாகரத்து செய்யவும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவரை தேடி வந்த உமேஷ், நன்றாக பார்த்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, மனைவியை அழைத்து சென்றார். ஆனால் உமேஷ் திருந்தவில்லை. இதனால், மனைவி மீண்டும் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். கார்மென்ட்ஸ் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். ஏற்கனவே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட உமேஷுக்கு, மனைவி வேலைக்கு செல்வது கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மனைவி பணியாற்றும் கார்மென்ட்ஸ்க்கு வந்தார். மனைவியிடம் பேச வேண்டும் என கூறி அழைத்து சென்று, கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரோஜாவை, கார்மென்ட்ஸ் ஊழியர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, உமேஷ் உட்பட நால்வர் மீது ஹாசன் நகர் போலீஸ் நிலையத்தில், ரோஜாவின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் உமேஷை கைது செய்து, விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை