அடுத்தவர் மனைவியுடன் ஏ.எஸ்.ஐ., கள்ளத்தொடர்பு குடும்பத்தை சீரழித்து விட்டதாக கணவர் புகார்
பெங்களூரு: குடும்ப பிரச்னை குறித்து புகார் அளிக்க வந்த பெண்ணுடன், போலீஸ் அதிகாரி கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை சீர் குலைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஜயபுரா மாவட்டம் கோல்ஹாரை சேர்ந்தவர் பீமா சங்கர், 38. இவர், 10 ஆண்டுகளுக்கு முன், அனுராதா, 33, என்பவரை திருமணம் செய்தார். தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளன. தந்தையை இழந்த பீமா சங்கர், தன் தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அலமேலா போலீஸ் நிலையத்தில், கணவர் மீது அனுராதா புகார் அளித்தார். அப்போது விசாரணை என்ற பெயரில், அன்றைய ஏ.எஸ்.ஐ., மனோகர் கஞ்சகார், அனுராதாவின் மொபைல் எண்ணை பெற்றார். பின், அவ்வப்போது அவருடன் பேசி நெருக்கமானார். இது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறியாத கணவர் பீமாசங்கர், பணி நிமித்தமாக, 2023ல் குடும்பத்துடன் பெங்களூரு வந்தார். தன் முன்னோர்கள் வழியாக கிடைத்த சொத்துக்களை விற்று, அந்த பணத்தில் பெங்களூரின் கும்பலகோடுவில் புதிதாக வீடு வாங்கினார். அதை தன் பெயரிலும், மனைவி பெயரிலும் பதிவு செய்தார். பெங்களூரிலும் தம்பதிக்கு இடையே ஒற்றுமை இருக்கவில்லை. சிறு, சிறு பிரச்னைகளை எல்லாம் பெரிதாக்கி, கணவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதை, அனுராதா வழக்கமாக்கினார். இதற்கு, ஏ.எஸ்.ஐ., மனோகர் கஞ்சகார் துாண்டுதலாக இருந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த பீமா சங்கர், அவரை கண்காணித்தார். அனுராதாவின் மொபைல் போனை பார்த்த போது, போலீஸ் அதிகாரியுடன் அவர் அடிக்கடி பேசுவதும், அவருடன் சேட்டிங் செய்வதும், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனால் மனம் நொந்த அவர், குழந்தைகளை மனைவியிடம் விட்டு விட்டு, தன் சொந்த ஊருக்கு சென்றார். சில நாட்களுக்கு பின், அவரது மகன் யாரோ ஒருவருடைய மொபைல் போனில் இருந்து, தந்தைக்கு போன் செய்து, 'அப்பா யாரோ ஒருவர் அம்மாவுடன் இருக்கிறார். அவரை அப்பா என்று கூப்பிடும்படி என்னை அடிக்கிறார். ஷூ காலால் மிதித்து சித்ரவதை செய்கிறார். என்னை அழைத்து செல்' என்று கூறி அழுதுள்ளார். உடனடியாக பெங்களூருக்கு வந்த பீமாசங்கர், மகனுடன் கும்பலகோடு போலீஸ் நிலையத்துக்கு சென்று, மனைவி மற்றும் ஏ.எஸ்.ஐ., மனோகர் கஞ்சகார் மீது புகார் அளித்தார். போலீசார் அனுராதாவை விசாரித்த போது, போலீஸ் அதிகாரியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டு அவருடன் சென்று விட்டார். அலமேலாவில் ஏ.எஸ்.ஐ.,யாக இருந்த மனோகர் கஞ்சகார், எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்று, பசவனபாகேவாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார். தங்களின் குடும்பத்தை சீர் குலைத்த அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, உயர் அதிகாரிகளிடம் பீமா சங்கர் சில நாட்களுக்கு முன் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில், மனோகர் கஞ்சகார் ஒன்றரை மாதமாக பணிக்கு வரவில்லை. அவரிடம் விசாரணை நடத்தும்படி, மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.