மனைவியை கொன்று கணவர் தலைமறைவு
ஹாசன்: குழந்தையை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை, கொலை செய்து விட்டு, தலைமறைவான கணவர் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் தேடுகின்றனர். ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணா தாலுகாவின் திப்பு நகரில் வசிப்பவர் சைபுல்லா, 37. இவரது மனைவி குல்ஷீர் பானு, 31. திருமணமான சில ஆண்டுகள் வரை, அன்பாகவே இருந்தனர். சைபுல்லாவுக்கு குடிப்பழக்கம் உட்பட தீய பழக்கங்கள் ஏற்பட்டதால், குடும்பத்தில் பிரச்னை துவங்கியது. பல இடங்களில் கடன் வாங்கிய சைபுல்லா, தாய் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும் படி, மனைவியை கொடுமைப்படுத்தினார். பணத்துக்காக மனைவியின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், தன் ஆண் குழந்தையை சைபுல்லா விற்றதால், மனைவி கோபம் அடைந்தார். இதனால், தம்பதிக்கிடையே தினமும் சண்டை நடந்தது. குல்ஷீர் பானுவின் பெற்றோர், பலமுறை பணமும், தங்க நகைகளும் கொடுத்தும், சைபுல்லா திருப்தி அடையாமல் ப ணம் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்தார். ஊர் பெரியவர்கள் முன்னிலையில், சமாதான பேச்சு நடந்தும் பயன் இல்லை. பக்ரீத் பண்டிகையான நேற்று முன் தினம் மதியம், குல்ஷீர் பானு அப்பகுதியில் வசிக்கும் பெண்ணுடன், ஏரிக்கு சென்று துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கணவர் சைபுல்லா, மனைவியை அடித்து இழுத்து சென்றுள்ளார். வீட்டில் வைத்து அவரை கண்மூடித்தனமாக தாக்கி, கொலை செய்துள்ளார். இதற்கு சைபுல்லாவின் குடும்பத்தினரும் உடந்தை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குல்ஷீர் பானுவின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சென்னராயபட்டணா போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். தலைமறைவான சைபுல்லா மற்றும் அவரது பெற்றோரை தேடுகின்றனர்.