மனைவியை கொன்று திதி கார்டுக்கு ஆர்டர் கணவரும் தற்கொலை
ஹாவேரி : ஹாவேரி, பேடகியின், தடசா கிராமத்தை சேர்ந்தவர் ரவி ஹடகலி, 30. இவர் பிளம்பர் பணி செய்து வந்தார். இவரது மனைவி பவித்ரா, 25. இவர் கார்மென்ட்ஸ் பேக்டரியில் பணியாற்றினார். தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பவித்ராவின் நடத்தையில், சமீப காலமாக மாற்றம் தென்பட்டது. பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். காலை வீட்டில் இருந்து புறப்பட்டால், நள்ளிரவு வீட்டுக்கு திரும்புவார். எப்போதும் மொபைல் போனில் பேசியபடியே இருந்தார். இதுபற்றி கேள்வி எழுப்பினால், அலட்சியம் செய்தார். இதனால் ரவி மனம் நொந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இரவு, இதே விஷயமாக தம்பதிக்கு தகராறு நடந்தது. எவ்வளவோ புத்தி சொல்லியும், மனைவி திருந்துவதாக தெரியவில்லை. எனவே நேற்று முன்தினம் அதிகாலை, மனைவியின் தலையில் கல்லை போட முயற்சித்தார். முடியவில்லை. அதன்பின் சமையல் அறையில் இருந்து கத்தியை கொண்டு வந்து, சரமாரியாக குத்தி கொலை செய்தார். சத்தம் கேட்டு எழுந்த மகன்களை சமாதானம் செய்து, பேடகிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த அச்சகத்தில் தனக்கும், தன் மனைவிக்கும் திதி கார்டு அச்சிட ஆர்டர் கொடுத்தார். அதன்பின் பிள்ளைகளுடன் இரவு வீடு திரும்பினார். பிள்ளைகளுக்கு 100 ரூபாய் கொடுத்து, கடைக்கு சென்று தின்பண்டம் வாங்கி சாப்பிடும்படி அனுப்பினார். அவர்கள் சென்றதும், ரவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.