மனைவிக்கு சோபா வாங்கி கொடுத்த கணவர் தீயில் கருகி பலி: கள்ளக்காதலி கொன்றதாக புகார்
சிக்கபல்லாபூர்: மனைவிக்கு சோபா வாங்கி கொடுத்து, கள்ளக்காதலியின் கோபத்துக்கு ஆளான இளைஞர், சந்தேகத்துக்கு இடமாக தீயில் கருகி உயிரிழந்தார். சிக்கபல்லாபூர் மாவட்டம், குடிபன்டே தாலுகாவின் ஹம்பசந்திரா கிராமத்தில் வசித்தவர் ககன் சங்கர், 28. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், வெண்ணிலா, 38, என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டது. இது, நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. அவ்வப்போது இருவரும் ரகசியமாக சந்தித்து கொண்டனர். மகனின் தகாத உறவை அறிந்து கொண்ட பெற்றோர், வேறு ஒரு பெண்ணுடன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணமாகி, குழந்தை பிறந்தும், வெண்ணிலாவுடனான உறவை, ககன் சங்கர் விடவில்லை. இதற்கிடையே அதே கிராமத்தின் தேவேந்திரப்பாவுடன், வெண்ணிலாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆனால் ககன் சங்கருடன் அதிக நெருக்கமாக இருந்தார். சில நாட்களுக்கு முன், தன் மனைவிக்கு ககன் சங்கர் புதிதாக சோபா செட் வாங்கி கொடுத்தார். இதையறிந்த வெண்ணிலா, ககன் சங்கருடன் சண்டை போட்டு உள்ளார். நேற்று முன் தினம், தன் வீட்டுக்கு வரவழைத்தார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. இதே வேளையில் தேவேந்திரப்பாவும் அங்கு இருந்தார். திடீரென அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதியினர் வெண்ணிலாவின் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ககன் சங்கர் தீயில் எரிந்து கொண்டிருந்தார். தீயை அணைத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். நடந்த சம்பவத்தால் கோபமடைந்த ககன் சங்கரின் குடும்பத்தினர், வெண்ணிலாவின் வீட்டுக்குள் புகுந்து, பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. ககன் சங்கர் தானே தீ வைத்து கொண்டாரா அல்லது வெண்ணிலாவும், தேவேந்திரப்பாவும் தீ வைத்தனரா என்பது தெரியவில்லை. வெண்ணிலா தங்கள் மகனை தீ வைத்து கொலை செய்ததாக, ககன் சங்கரின் பெற்றோர், குடிபன்டே போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரிக்கின்றனர்.