உள்ளூர் செய்திகள்

நான் அவன் இல்லை!

சாலை பள்ளங்கள் விவகாரத்தில் சித்தராமையாகர்நாடகாவின் தலைநகரான பெங்களூரின் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எந்த சாலையில் பார்த்தாலும் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. சாலைப் பள்ள விவகாரத்தில் தொழிலதிபர்கள், ஐ.டி., நிறுவனங்களின் பிரதிநிதிகள் அரசுக்கு எதிராக பேசியது, தேசிய அளவில் எதிரொலித்தது. சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியும் கொடுத்தது. இதனால், 'அக்டோபர் 31ம் தேதிக்குள், பெங்களூரில் சாலைப் பள்ளங்களை மூட வேண்டும்' என, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய அதிகாரிகளுக்கு கடந்த 22ம் தேதி முதல்வர் கெ டு விதித்தார். முதல்வர் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனால் அவரது உத்தரவை, ஜி.பி.ஏ., அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டுள்ளனர். பெரும்பாலான சாலைப் பள்ளங்கள் மூடப்படவே இல்லை. இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், நேற்று காலை விதான் சவுதாவுக்கு வந்த சித்தராமையாவிடம் ஊடகத்தினர் கேள்வி எழுப்பினர். காய் நகர்த்தல் இதற்கு ஒற்றை வார்த்தையில், ''தயவு செய்து டி.கே.சிவகுமாரிடம் கேளுங்கள்,'' என, கூறிவிட்டு முதல்வர் சென்றுவிட்டார். பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சராக சிவகுமார் இருப்பதால், அவரிடம் கேட்கும்படி முதல்வர் கூறி இருக்கிறார். இதன்மூலம் சாலைப் பள்ளங்கள் விஷயத்தில் எழுந்துள்ள நெருக்கடியில் இருந்து நழுவிக் கொள்ள முதல்வர் சித்தராமையா முற்பட்டுள்ளாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சாலைப் பள்ளங்களால் மட்டுமே அரசுக்கு நெருக்கடி எழுகிறது என்பதால், ஐந்து வாக்குறுதி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ள நிலையில், பெங்களூரு பொறுப்பு அமைச்சராக இந்த விஷயத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டதை பகிரங்கப்படுத்தும் ராஜதந்திர வேலையில் இறங்கி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்று வரும் 20ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனால் முதல்வர் பதவியை சிவகுமாருக்கு சித்தராமையா விட்டுத் தருவாரா என்ற கேள்வி, அனைத்து மட்டங்களிலும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தால் முதல்வர் 'டென்ஷனி'ல் இருப்பதாக கூறப்படுகிறது. இதை உணர்ந்திருந்தபோதிலும் ஊடகத்தினரிடம் முதல்வர் நேற்று நடந்து கொண்டது, அதிர்ச்சியை அளித்தது. விதான் சவுதாவிற்குள் கோபமாக சென்ற அவர் திரும்ப வந்தபோதும், கோபமாகவே காணப்பட்டார். அப்போதும் விடாப்பிடியாக ஊடகத்தினர் அவரிடம், 'வரும் 21ம் தேதி சிவகுமார் முதல்வராக பதவி ஏற்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளதே?' என கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியால் ஆவேசமடைந்த சித்தராமையா, ''சிவகுமார் உங்களிடம் அப்படி சொன்னாரா, உங்களுக்கு எப்படி தெரியும்? எந்த பத்திரிகையில் அப்படி ஒரு செய்தியை படித்தீர்கள்? நான் அனைத்து பத்திரிகையும் படித்தேன். அப்படி ஒரு செய்தி வரவே இல்லையே?'' என கேட்டார். கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள், ஒரு பத்திரிகையின் பெயரை கூறினார். அதற்கு எந்த பதிலும் கூறாமல் சித்தராமையா சென்றுவிட்டார்.

மரண பள்ளங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் அசோக் 'எக்ஸ்' வலைதள பதிவு: பெங்களூரில் உள்ள சாலையின் மரண பள்ளங்களை மூட கொடுத்த காலக்கெடு நினைவில் உள்ளதா சித்தராமையா, சிவகுமார் அவர்களே! இன்று தேதி என்ன தெரியுமா? பள்ளங்களை மூட நீங்கள் பணம் விடுவிக்கவில்லையா அல்லது அதிகாரிகள் உங்கள் பேச்சை கேட்கவில்லையா? திறமையற்ற அரசு, அமைச்சர்கள். இந்த குழப்பம் எவ்வளவு காலம் நீடிக்கும். மக்கள் அரசை சபிக்கின்றனர். தயவு செய்து ராஜினாமா செய்து செல்லுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

15,000 பள்ளங்கள் மூடல்

ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மகேஸ்வர ராவ் கூறுகையில், ''முதல்வர் விதித்த காலகெடுவிற்குள், பள்ளங்களை மூட முயற்சி எடுத்தோம். மழையால், பள்ளங்களை மூடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 15,000க்கும் அதிக பள்ளங்களை மூடி உள்ளோம். ஓரிரு நாட்களில் முக்கிய சந்திப்புகளில் உள்ள பள்ளங்களை மூடுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை