விஜயேந்திரா பதவி விலகியதும் கட்சியில் இணைவேன்: எத்னால்
விஜயபுரா: ''விஜயேந்திரா பதவி விலகியதும், பா.ஜ.,வில் இணைத்து கொள்வதாக, கட்சி மேலிடம் கூறி உள்ளது,'' என எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.விஜயபுராவில் அவர் அளித்த பேட்டி:பா.ஜ.,வில் இணையும்படி மாநில தலைவர்கள் உட்பட யாரும் கேட்கவில்லை. சிலருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. என்னை கட்சியில் இருந்து நிரந்தரமாக துாக்கி வீசி விட்டனர். இனி வரமாட்டேன் என்று நினைக்கின்றனர். ஆனால் கட்சி மேலிடம் தொடர்ந்து என்னிடம் பேசிக் கொண்டு தான் இருக்கிறது.விஜயேந்திரா பதவி விலகியதும், பா.ஜ.,வில் இணைத்து கொள்வதாக, கட்சி மேலிடம் கூறி உள்ளது. விஜயபுராவில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்துள்ளார். இதற்கு நான் காரணமல்ல. நான், நாட்டுக்காகவும், பிரதமர் மோடிக்காகவும் ஓட்டு போட்டேன். காங்கிரசின் ராஜு அலகூரா உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், மக்கள் அவருக்கு ஓட்டு போட்டனர்.காந்தி தான் முஸ்லிம்களுக்கு பாகிஸ்தானை கொடுத்தார். காந்தியின் குழந்தை தான் பாகிஸ்தான். அவர் நம் நாட்டின் தந்தையல்ல. பாகிஸ்தானின் தந்தை. பாகிஸ்தானில் காந்திக்கு ஒரு சிலை கூட இல்லை. ஆனால் நாம் பல காந்தி சிலைகளை வைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.